திருப்பத்தூரில் அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி அதிமுகவில் இனி சசிகலா, தினகரனுக்கு இடமில்லை

திருப்பத்தூர்: அதிமுகவில் இனி எப்போதும் சசிகலா, தினகரன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இடமில்லை என வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு புதிய குளிர்சாதன பஸ்சை தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பத்தூர் தனி மாவட்டமாக வரும் ஜனவரி மாதம் முதல் செயல்படும். அதற்கான ஆயத்தப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அரசு அலுவலகங்களுக்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும். அதற்கான வேலைகள் வேகமாக நடக்கிறது. அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளது. வேலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான  ஆலோசனைக் கூட்டம் நாளை முதல் நடைபெறும். சிறையில் இருக்கும் சசிகலா விடுதலை ஆன உடன் அதிமுகவில் மாற்றம் வரும் என கூறுவதை ஏற்க முடியாது.

எந்த மாற்றமும் வராது. சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது  குடும்பத்தாரை எதிர்த்து நாங்கள் தர்மயுத்தம் நடத்தினோம். அம்மா வளர்த்த கட்சிக்கு துரோகம் செய்த சசிகலா குடும்பத்தாரை நாங்கள் ஒரு போதும் ஏற்கமாட்டோம்.  அதிமுகவில் இனி எப்போதும் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது  குடும்பத்தாருக்கு இடமில்லை. அமமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து கட்சி பணியாற்றி வருகின்றனர். மேலும், சிலர் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இம்மாதம் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் சசிகலாவை சேர்ப்பது குறித்து முக்கிய முடிவுகளை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் எடுப்பார்கள் என பரபரப்பாக  பேசப்பட்டு வரும் நேரத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி சசிகலாவுக்கு கட்சியில் இடமில்லை என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: