தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்

சென்னை: டிடிவி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு நேற்று திடீரென எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமானார்.   நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பிறகு அமமுக நிர்வாகிகள் பலர் டிடிவி.தினகரனை நேரில் சந்திக்க நினைத்தனர். ஆனால், அவர்களை நேரில் சந்திப்பதை தினகரன் தவிர்த்து வந்தார். இதனால், தலைமையின் மேல் அதிருப்திக்கு ஆளான நிர்வாகிகள் பலர் மாற்று கட்சியில் இணைந்தவாறு இருந்தனர். அதன்படி, தங்க தமிழ்செல்வன் திமுகவிலும், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் அதிமுகவிலும் இணைந்தனர்.  

Advertising
Advertising

இதேபோல், அதிமுகவில் இருந்து டிடிவி.தினகரனை நீக்கிய பிறகும் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் மற்றும் பிரபு ஆகிய மூன்று எம்.எல்.ஏக்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களாக செயல்பட்டு வந்தனர். இந்தநிலையில், அமமுகவில் இருந்து பலரும் வெளியேறியதையடுத்து ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மீண்டும் அதிமுகவில் ஐக்கியம் ஆனார்கள். இதில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு மட்டுமே தொடர்ந்து டிடிவி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். இந்தநிலையில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார்.

Related Stories: