விஜய் எதை கூறினாலும் சுயமாக பேசுவது நல்லது: திருமாவளவன் எச்சரிக்கை

காரியாபட்டி: விருதுநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி: பாஜ, அதிமுக கூட்டணியின் அரசியலை மக்கள் உணர்ந்துள்ளார்கள். திருப்பரங்குன்றம் பிரச்னையை பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதியில்லை என அண்ணாமலை கூறுகிறார். அவர் தகுதிக்கான வரையறை என்ன வைத்துள்ளார் என எனக்கு தெரியவில்லை. நான் ஒரு தமிழ் மகன். இந்த மண்ணின் மைந்தன். மதத்தின் பெயராலோ ஜாதியின் பெயராலோ இங்கு வன்முறை நிகழக்கூடாது என்று விரும்புபவன். இதுவே திருப்பரங்குன்றம் பிரச்னையை பற்றி பேசுவதற்கு எனக்கான தகுதியாக நான் கருதுகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

அப்போது, ‘தவெக தலைவர் விஜய், தீய சக்தி’ என கூறியது தொடர்பான கேள்விக்கு, ‘‘விஜய் சொந்தமாக இதையெல்லாம் சொல்வது போல தெரியவில்லை. அவர் எதைச் சொன்னாலும் சுயமாக சிந்தித்து எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மக்களின் நன்னம்பிக்கையை பெறக்கூடிய வகையில் பேசினால் அவருக்கு நல்லது. ஆனால் அவரது பேச்சு திட்டமிட்டு பிறரால் தூண்டப்பட்ட ஒரு பேச்சாக இருக்கிறது. அவரது உரை முழுவதும் திமுக வெறுப்பாக மட்டுமே உள்ளது’’ என்றார்.

‘காந்தியை பாஜ சிறுமைப்படுத்துகிறது’
‘மகாத்மா காந்தியின் பெயரில் இயங்கி வந்த நூறுநாள் வேலைத்திட்டத்தின் பெயரை மாற்றும் புதிய சட்டத்திருத்தத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. விபி ஜி ராம்ஜி என்ற வடமொழி பெயரில் அதன் அடையாளத்தை மாற்றிவிட்டார்கள். காந்தியடிகளை சிறுமைப்படுத்துவது மற்றும் அவருடைய அடையாளத்தை அழிப்பது என்பதுதான் பாஜ உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் நோக்கமாக உள்ளது. இந்த போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. இதற்காக வரும் 24ம் தேதி திமுக தலைமையில் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன். தமிழக மக்களுக்காக நடைபெறும் போராட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் தவறாமல் பங்கேற்கும்’ என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Related Stories: