முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது: 97 லட்சம் வாக்காளர் நீக்கம் குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் 97 லட்சம் வாக்காளர் நீக்கம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்ஐஆர்) பணி நடந்து வந்தது. கடந்த நவம்பர் 4ம் தொடங்கிய எஸ்ஐஆர் பணி கடந்த 14ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதில் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் இருந்து மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.41 கோடியில் இருந்து 5.43 கோடியாக குறைந்துள்ளது. சுமார் 22 ஆண்டுகளுக்கு பின் நடந்துள்ள வாக்காளர் திருத்தப் பட்டியல் என்பதால், சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 39 சதவீத வாக்காளர்களும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் 35 சதவீத வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனனர்.

மேலும் திமுக எம்எல்ஏக்கள் உள்ள தொகுதிகளில் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இடம் பெயர்ந்ததாக கூறி 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வளவு பேர் நீக்கப்பட்டது குறித்து அரசியல் கட்சியினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து விவாதிக்கும் வகையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்” 21ம் தேதி(இன்று) மாலை 6 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இதில் மாவட்டச் செயலாளர்கள்-நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். வரைவு வாக்காளர் பட்டியல் பொருள் குறித்தும், வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாகவும் கூட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் வாக்காளர் பட்டியலை வைத்து, திமுகவினர் ஒவ்வொரு வீடாக சென்று சரி பார்க்கும் பணியில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 39 சதவீத வாக்காளர்களும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் 35 சதவீத வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனனர்.

Related Stories: