சர்க்கரை ஆலையில் திடீர் தொழில்நுட்ப கோளாறால் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் கரும்பு லோடுகள்

மதுராந்தகம்: மதுராந்தகம் சர்க்கரை ஆலை திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயங்கவில்லை. இதனால், கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி, டிராக்டர்கள் கரும்பு அரவைக்காக சாலையில் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளத்தில், காமராஜர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலைக்கு மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், செய்யூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்புகள் லாரி, டிராக்டர்களில் டன் கணக்கில் கொண்டு வந்து சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது.இந்நிலையில், கடந்த 2 நாட்களாக, சர்க்கரை ஆலையில் உள்ள இயந்திரத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து அரவைக்காக கரும்புகளை ஏற்றி வந்த 100க்கும் மேற்பட்ட லாரிகள், டிராக்டர்கள், சாலையில் நீண்ட வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோல், வாகனங்கள் சாலையில் காத்து கிடப்பதால், கரும்பின் எடை குறையும் என்றும், தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் எனவும் விவசாயிகள் கூறுகின்றனர். லாரி மற்றும் டிராக்டர் டிரைவர்களும், 2 நாட்களாக வருமானத்தை இழந்து காத்து கிடப்பதாக கூறுகின்றனர். எனவே, மேற்கண்ட சர்க்கரை ஆலையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதுபோன்று மீண்டும், பிரச்னை ஏற்படாதபடி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்….

The post சர்க்கரை ஆலையில் திடீர் தொழில்நுட்ப கோளாறால் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் கரும்பு லோடுகள் appeared first on Dinakaran.

Related Stories: