கரூர்- திருச்சி பைபாஸ் சர்வீஸ் சாலையில் வேகத்தடையில் பூசப்பட்ட வெள்ளை வர்ணம் அழிந்ததால் அடிக்கடி விபத்து

கரூர் : கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள சர்வீஸ் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் மாவட்டம் சுக்காலியூரில் இருந்து திருச்சி வரை பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. உப்பிடமங்கலம், வெள்ளியணை, தோரணக்கல்பட்டி போன்ற பல பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாலப் பகுதிகளை ஒட்டி கிராமப்புற பகுதிகளில் இருந்து பைபாஸ் சாலைகளுக்கு வரும் வாகனங்களின் வசதிக்காக அனைத்து மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

கிராம பகுதிகளில் இருந்து பைபாஸ் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் நின்று நிதானித்து வரும் வகையில் இந்த வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில் வேகத்தடைகள் அனைத்தும் வெள்ளை வர்ணம் அழிந்து தரையோடு தரையாக உள்ளது. இதனால் சாலை எது, வேகத்தடை எது என்பது தெரியாமல் உள்ளது.

இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் சிரமப்பட்டு வருகின்றன. பகல் நேரத்தில் கூட வேகத்தடை இருப்பது தெரியவில்லை. இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் படாதபாடு படுகின்றனர். அவ்வப்போது வேகத்தடை இருப்பதை அறியாமல் பல வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகியும் வருகின்றன. எனவே சர்வீஸ் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் உடனடியாக வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சர்வீஸ் சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் வர்ணம் பூச தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: