மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் டிஎஸ்பி ராஜாராமிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

மதுரை: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் டிஎஸ்பி ராஜாராமிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கில் கடந்த வாரம் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த நிலையில் ஏடிஎஸ்பி ராஜாராமிற்கு 5 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை, தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு

மதுரை, தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது, கடந்த 2007 மே 9ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் ஊழியர்கள் கோபிநாத், வினோத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் உயிரிழந்தனர். இவ்வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி உள்பட 17 பேரை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 9.12.2009ல் விடுதலை செய்தது. இதை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், ஊழியர் வினோத்தின் தாயார் பூங்கொடி தரப்பிலும், ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை நீதிபதிகள் பி.எஸ்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் அமர்வு விசாரித்தது.சிபிஐ தரப்பில் போதிய ஆர்வம் காட்டாத நிலையில், இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ தனி வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டார். இறுதிக்கட்ட விசாரணை கடந்த 8ம் தேதி பூட்டிய நீதிமன்ற அறைக்குள் நடந்தது. அன்று சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள், புகைப்படங்களை நீதிபதிகள் பார்வையிட்டனர்.  பின்னர் கடந்த 9ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு

இதனிடையே நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் அளித்த தீர்ப்பு வருமாறு: மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான அட்டாக் பாண்டி, ஆரோக்கிய பிரபு, விஜயபாண்டி, கந்தசாமி, ராமையாபாண்டியன், சுதாகர், திருமுருகன், ரூபன், மாலிக்பாட்சா ஆகியோருக்கு 302வது பிரிவின் கீழ் தலா 3 ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவர்கள் மீதான பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், வெடிமருந்து சட்டம் உள்பட 5 பிரிவுகளுக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஒவ்வொரு பிரிவுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் வழங்கப்படுகிறது.

இந்த தண்டனையை 9 பேரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். இந்த 9 பேரில் அட்டாக் பாண்டி தவிர்த்து, எஞ்சிய 8 பேரையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.  பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்ட வினோத், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகியோரின் குடும்பத்துக்கு, தமிழக அரசு 3 மாதத்தில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.  இவ்வழக்கில் 17வது எதிரியான டிஎஸ்பி ராஜாராம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானிக்கிறது. அவருக்கான தண்டனை மார்ச் 25ல் அறிவிக்கப்படும். அதற்காக அன்று ராஜாராம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளை பொறுத்தவரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

டிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

இந்நிலையில் அலுவலக எரிப்பு சம்பவத்தை தடுக்க தவறிய அப்போதைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க உதவியதாக டி.எஸ்.பி ராஜாராம் மீது குற்றச்சாட்டப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: