முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரான்ஸ் அரசியல் விமர்சகர் நாட்டை விட்டு வெளியேற்றம்: உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

தஞ்சை: தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அரசியல் விமர்சகர் அந்தோணி ருசேல் 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமென உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதியும், அரசியல் விமர்சகருமான அந்தோணி ருசேல் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவுக்கு 6 மாத சுற்றுலா விசாவில் வந்துள்ளார். தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விட்டு நேற்று மதியம் தஞ்சாவூர் முள்ளி வாய்க்கால் முற்றத்துக்கு வந்தார். இவர் முள்ளி வாய்க்கால் முற்றத்தில் நேற்று நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றி பார்த்து விட்டு வெளியில் வந்த அந்தோணி ருசேலை போலீசார் மறித்தனர். பின்னர் அந்தோணி ருசேல், 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமென மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக கூறி அயல்நாட்டு வருகை பதிவு அலுவலரும், தஞ்சை எஸ்பி மகேஸ்வரன் உத்தரவின்படி கூறினர். இதையடுத்து அந்தோணி ருசேல் கார் மூலம் புதுச்சேரியில் உள்ள தூதகரத்தில் முறையிடுவதற்காக புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கலந்துரையாடல் கூட்டம் தான் நடைபெற இருந்தது. இந்தியாவுக்கு வந்த அவரை நாங்கள் பிரெஞ்ச் மொழி மற்றும் பண்பாடு குறித்து கலந்துரையாட அழைத்தோம். ஆனால் அவரை போலீசார் என்ன காரணம் என்று கூறாமல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு என கூறி 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமென கூறியது கண்டிக்கத்தக்கது. பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பிறநாட்டு மக்களை இழிவுப்படுத்தும் வகையில் நடந்து கொள்வது மனித நேயமற்ற செயலாகும். இது வேண்டாத எதிர்விளைவுகளே ஏற்படுத்தும். இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை இதுபோன்ற செயல்களால் குறையும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: