வாஷிங்மெசின் தருவேன் என்பது ஆடம்பரமான அறிவிப்பு: சரத்குமார் பிரசாரம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் தொகுதியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஜெயந்தியை ஆதரித்து அஇசம கட்சித்தலைவர் சரத்குமார் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அருகே வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:- முயற்சி எடுத்து உழைத்து உயர்ந்தவர்களெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம். இரு திராவிட இயக்கங்களுக்கும் மாற்றாக ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும். இன்று ஒரு வேட்பாளர் ரூ. 50 கோடி செலவு செய்தால் தான் சட்டசபைக்கும், பாராளுமன்றத்திற்கு போட்டியிடுவதாக இருந்தால் ரூ. 100 கோடியும் செலவழிக்க வேண்டும். பணம் வைத்திருப்பவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் மட்டுமே சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் செல்ல முடியும் என்ற அவல நிலை உள்ளது. அதை மாற்ற வேண்டும். மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்ட பொது நல சேவையில் தங்களை அர்ப்பணித்து கொண்டவர்கள் சட்டமன்றத்திற்கு செல்லும் போது ஏழை, எளிய மக்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும். எங்களுடைய தேர்தல் அறிக்கையில் அனைத்து துறைகளிலும் 50 சதவீதம் பெண்களுக்கு இடம் வேண்டும். பெண்கள் பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் உயர வேண்டும் என்பதற்காகவே படித்து வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் ஊதியம் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேவையற்ற இலவசங்கள் தருவதாக இல்லை. வாஷிங்மெசின் தருவேன் என்பது ஆடம்பரமான அறிவிப்பு. வாக்குக்கு பணம் கொடுப்பதை தயவுசெய்து வாங்காதீர்கள். அடுத்த தலைமுறை சீரழிந்து விடும். உழைக்கின்ற பணமே நிலைக்கும். 57 ஆண்டுகளாகியும் வீட்டின் முன் ஏன் சாக்கடை ஓட வேண்டும். மாற்றத்திற்காக நாங்கள் நல்ல பல திட்டங்களை வைத்திருக்கிறோம். மாற்றத்திற்காக வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு சரத்குமார் பேசினார். தொடர்ந்து சரத்குமார் நாசரேத், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்….

The post வாஷிங்மெசின் தருவேன் என்பது ஆடம்பரமான அறிவிப்பு: சரத்குமார் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: