0.6 டிஎம்சி நீரை தேக்கி வைக்கலாம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 396 கோடியில் 2 கதவணை : பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆதனூர் மற்றும் குமாரமங்கலத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டுவதற்கான பணி மார்ச்சில் தொடங்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவிரியில் மழைக்காலங்களில் வரும் வெள்ளநீரை திருப்பிவிடுவதற்காக கொள்ளிடம் ஆறு ஒரு பிரதான வெள்ளநீர் போக்கியாக செயல்படுகிறது. இந்த ஆற்றின் கீழணையில் எந்த ஒரு பாசனக் கட்டுமானமும் இல்லாததால் மழைக்காலத்தில் கிடைக்கும் வெள்ளநீர் கீழணையைத் தாண்டி கடலுக்கு சென்று வீணாகக் கலக்கிறது. இதைத் தடுக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் ஆதனூர்-குமாரமங்கலம் கிராமங்களில் கீழணையின் கீழ்புறம் தலைமதகுகளுடன் கதவணை அமைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று கடந்த 2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110விதியின்கீழ் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடலூர் மாவட்டத்தின் ஆதனூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் குமாரமங்கலம் ஆகிய இடங்களில் தலைமதகுகளுடன் கூடிய கதவணையை நபார்டு வங்கி கடனுதவியுடன் 400 கோடி செலவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை திட்டம் மற்றும் உருவாக்கம் பிரிவின் சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஒப்புதல் கேட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி, நபார்டு வங்கியிடம் கடனுதவி கேட்டு திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு நபார்டு வங்கி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து கடந்த நவம்பர் 11ம் தேதி ₹396 கோடியில் கதவணை அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தற்போது, இந்த கதவணை கட்டுமானப் பணிக்கு பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு பிப்ரவரியில் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படுகிறது. தொடர்ந்து மார்ச் முதல் கட்டுமானப்பணிகளை தொடங்கி இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 2 கதவணைகள் அமையும் பட்சத்தில் 0.6டி.எம்.சி நீரை தேக்கி வைத்து அப்பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்த முடியும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: