திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துவாதசியையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: 2வது நாள் சொர்க்க வாசல் தரிசனத்துக்கு பக்தர்கள் அலைமோதல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துவாதசியையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. 2வது நாளாக சொர்க்கவாசல் தரிசனத்துக்கு பக்தர்கள் அலைமோதினர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியன்று பரமபத வாசல் எனக்கூடிய சொர்க்கவாசல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 18ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை முதல்  81 ஆயிரத்து 188 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், துவாதசியையொட்டி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியும், சக்கரத்தாழ்வாரும் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து கோயில் தெப்பக்குளத்தில்  வராக சுவாமி கோயில் முன்பு கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், இளநீர், கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தெப்பகுளத்தில் புனித நீராடினர்.

துவாதசியையொட்டி 2வது நாளாக நேற்று சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் திரண்டனர். வைகுண்டம் காத்திருப்பு அறையில் 31 அறைகள் நிரம்பிய நிலையில் ஆழ்வார் ஏரியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வரிசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கூட்டத்தால் சுவாமி தரிசனத்திற்கு 12 மணி நேரமாகும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். நள்ளிரவு 12.30 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு அதன்பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து நடை அடைக்கப்பட உள்ளது. மீண்டும்  அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படவுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: