குலசை தசரா, தாமிரபரணி மகா புஷ்கர விழா : பக்தர்கள் குவிந்ததால் திணறிப்போனது திருச்செந்தூர்

திருச்செந்தூர்: குலசை தசரா மற்றும் தாமிரபரணி புஷ்கர விழாவினை முன்னிட்டு திருச்செந்தூரில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் குவிந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சரஸ்வதி பூஜையை யொட்டி இந்த ஆண்டு 4 நாட்கள் அரசு விடுமுறை நாளாக அமைந்தது.

இதனால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து குழந்தைகள், சிறுவர், சிறுமிகளை அழைத்துக் கொண்டு ஏராளமனோர் திருச்செந்தூருக்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் தசரா திருவிழா குலசேகரன்பட்டினத்தில் நிறைவடைந்தது. இந்தவிழாவைக் காணவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். இந்நிலையில் தாமிரபரணி புஷ்கர விழா நாளை (23ம் தேதி) வரை நடைபெறுவதால் நதியில் நீராட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு தீர்த்தக் கட்டங்களுக்கு வந்துள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று விடுமுறை நாளில் வரலாறு காணாத அளவிற்கு திருச்செந்தூரில் பக்தர்களின் கூட்டம் குவிந்தது. இதனால் டிபி ரோடு, நாழிக்கிணறு செல்லும் சாலை, கோயில் வளாகம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெருக்கடியை ஒரளவே சமாளிக்க முடிந்ததே தவிர முற்றிலும் தவிர்க்க முடியவில்லை. டிபி ரோடு வழியாக கோயிலுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் தாலுகா போலீஸ் ஸ்டேசன் அருகே நிறுத்திவிட்டனர். இதனால் காரில் வந்த முதியோர், குழந்தைகள் நடக்க முடியாமல் சிரமப்பட்டு நடந்து சென்றனர். நேற்று முன்தினமும், நேற்றும் அதிகாலை 4 மணி முதலே கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்தது. இந்த 4 நாட்களிலும் திருச்செந்தூர் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போதும் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாசலில் வரிசையில் காத்திருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: