ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நியாயமான கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும்

*கலெக்டரிடம், விசைத்தறி சங்கத்தினர் மனு

திருப்பூர் : ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நியாயமான கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும் என கலெக்டரிடம், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அப்போது காவுத்தம்பாளையம் வாமலை கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில்:காவுத்தம்பாளையம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் விஜயபுரி மாகாளியம்மன் கோவில் உள்ளது. வாமலைகவுண்டன்பாளையம், சுக்காகவுண்டன்புதூர், கந்தப்ப கவுண்டன்புதூர் ஆகிய 3 ஊர் பொதுமக்களுக்கு சொந்தமான 170க்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு குலதெய்வமாக இந்த கோவில் இருந்து வருகிறது.

இந்த கோவிலுக்கு அனைவரும் மாங்கல்ய கூட்டு வரிப்பணம் கொடுத்து வருகிறோம்.ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மாவிளக்கு எடுத்து பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து ஒற்றுமையுடன் ஊர்பொது மக்கள் அனைவரும் வழிபாடு செய்து வருகிறோம். இந்நிலையில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டோம். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சாமி சிலைகளை வெளியே வைக்க எதிர்ப்பு தெரிவித்து,கோவிலின் சுற்றுச்சுவரை சிலர் இடித்து சேதப்படுத்தி விட்டனர். எனவே இதற்கு தீர்வு காண வேண்டும். கும்பாபிஷேக விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.முன்னதாக இந்த கோரிக்கையை வலியுத்தி ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேங்கிபாளையம் சூரியநல்லூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில் : எங்களது பகுதியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். சூரியநல்லூரில் இடையன்கிணறு என்பது மத்திய பகுதியாகும். இந்த பகுதியில் டாஸ்மாக் கடை வருவதால் வாகனங்கள் விபத்து அதிகம் நடக்க வாய்ப்புள்ளது. என்.எச். சாலையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடை கட்டிடம் கட்டி உள்ளனர். இந்த டாஸ்மாக் கடை வருவதை எதிர்ப்பது என சூரியநல்லூர் மக்களும்,போராட்டக்குழுவும் முடிவு செய்துள்ளோம். இதனை மீறி டாஸ்மாக் கடை திறந்தால் போராட்டம் நடத்துவோம். என்றிருந்தனர்.

தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை திருப்பூர் மாவட்ட கவுன்சில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில்: தாராபுரம் வட்டம் மணக்கடவு விஏஒ, நலவாரியத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்களின் விண்ணப்பத்தினை தொடர்ந்து நிராகரித்து வருகிறார். எனவே தகுதியான இந்த தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தனர்.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் கொடுத்த மனுவில்: இன்றைய காலகட்ட விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் கூலி உயர்வுக்கு ஏற்ப நியாயமான கூலி உயர்வாக கடந்த 2022ல் கூலி உயர்வு ஒப்பந்தத்தில் இருந்து சோமனூர் ரகத்திற்கு 60 சதவீதம் கூலி உயர்வும்,இதர ரகங்களுக்கு 50 சதவீதம் கூலி உயர்வும் பேசி முடிக்கப்பட்டது.ஆனால் இதுவரை கூலி உயர்வு கிடைக்கவில்லை. எனவே ஜவுளி உற்பத்தியாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து நியாயமான புதிய கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டும். இதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தனர்.

இந்து மக்கள் எழுச்சி பேரவையினர் கொடுத்த மனுவில்: கோவில்வழியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு தினசரி 100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் திருப்பூரில் வேலை தேடி தென்மாவட்டங்களில் இருந்து வருகிறார்கள். அதிகளவு பயணிகள் வருவதால், குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. எனவே புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். என்றிருந்தனர்.

தாராபுரம் நல்லிபாளையம், கருப்பட்டிபாளையம், மானூர்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில்: எங்களது குடியிருப்புக்கு அருகில் மானூர்பாளையத்தில் முட்டைக்கோழி பண்ணை நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த பண்ணையை விரிவாக்கம் செய்ய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைந்துள்ள பண்ணையை நடத்த கூடாது என பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதுபோல் வழக்கும் உள்ளது. எனவே முட்டைக்கோழி பண்ணை அமைக்க அனுமதிக்க கூடாது. என்றிருந்தனர்.

அவினாசி வேலாயுதம்பாளையம் பொதுமக்கள் கொடுத்த மனுவில்: எங்களது பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகிறோம். பள்ளி மற்றும் கல்லூரிக்கு ஏராளமான மாணவமாணவிகள் வந்து படிக்க சென்று வருகிறார்கள். இந்நிலையில் அந்த வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவமாணவிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கொடுத்த மனுவில்: கண்டியன்கோவில் ஊராட்சியில் உள்ள தார்ச்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கபடாமல் உள்ளது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி 3வது மண்டலக்குழு கொடுத்த மனுவில்: 56வது பி.ஏ.பி. நகர் செரங்காடு தோட்டம் முதல் கிழக்கு வீதி, 2வது கிழக்கு வீதி, குறுக்கு வீதியில் தார்ச்சாலை அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதனை சீரமைக்க வேண்டும். இதுபோல் சாக்கடை கால்வாய் வசதி, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். என்றிருந்தனர்.

The post ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நியாயமான கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: