விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரத்தில் தீண்டாமை சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

*கலெக்டரிடம் மனு

தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரத்தில் தீண்டாமை சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஓட்டப்பிடாரம் தாலுகா மேலஅரசடி ஊராட்சிக்குட்பட்ட கீழவேலாயுதபுரம் கிராம மக்கள், பள்ளிக் குழந்தைகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கீழவேலாயுதபுரத்தை சேர்ந்த குழந்தைகள் வேலாயுதபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

எங்கள் கிராமத்தில் இருந்து வேலாயுதபுரத்துக்கு செல்லும் நடைபாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து அடைத்துள்ளார். இதனால் கடந்த 11ம் தேதி முதல் எங்கள் கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து பொது பாதையை மீட்டு தர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.
தூத்துக்குடி லூசியா காலனியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கு பேரூரணி கிராமத்தில் 2015ம் ஆண்டு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. பல்வேறு காரணங்களால் எங்களால் அங்கு வீடு கட்டி குடியேற இயலவில்லை. தற்போது இந்த இடத்தை சில தனிநபர்கள் ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை எங்களுக்கு மீட்டுத் தர வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அளித்த மனு: 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களையும் பாதுகாக்க வேண்டும். ஒன்றிய, மாநில பட்ஜெட்டுகளில் அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக 2 சதவீத நிதி ஒதுக்க வேண்டும். நலவாரிய பதிவு, புதுப்பித்தல், பணப் பலன்கள் பெறுதல் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்.

விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலுலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:சங்கரலிங்கபுரத்தில் ஆதிதிராவிடர் தெரு முதல் அருந்ததியர் தெரு வரை தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தீண்டாமை சுவரை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தான்குளம் இஸ்லாமிய தெருவை சேர்ந்த மக்கள் அளித்த மனு: புதுக்குளம் பகுதியில் இஸ்லாமிய மக்கள் 35 பேருக்கு கடந்த 28.10.2022ல் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இலவச கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும்.

இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளி, கல்லூரிகளில் சாதி பிரச்னைகளை களைவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி சந்துரு, அரசிடம் அளித்துள்ள அறிக்கை இந்துசமய நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த அறிக்கையை தமிழக அரசு ஏற்கக்கூடாது.

தூத்துக்குடி நகர்ப்புறத்தை சேர்ந்த இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்,கலெக்டர் அலுலகத்தில் அளித்த மனுவில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2700 இல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்பட்டன. தற்போது 220 மையங்கள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பணியாற்ற தயாராக உள்ளோம். எனவே இல்லம் தேடி கல்வி திட்டத்தை மீண்டும் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

தூத்துக்குடி அருகேயுள்ள சேர்வைக்காரன்மடம் ஊராட்சி துணை தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா தலைமையில் இப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும். மேலும் நிறுத்தப்பட்ட வை.-மதுரை, தூத்துக்குடி-உவரி வழித்தட பேருந்துகளை சேர்வைக்காரன்மடம் பகுதி வழியாக மீண்டும் இயக்க வேண்டும். சாத்தான்குளம்- ராமேஸ்வரம் இடையே எங்கள் பகுதி வழியாக புதிய பேருந்து இயக்க வேண்டும். சக்கம்மாள்புரம் மருதாணிக்குட்டம் ஷட்டரை மாற்றி புதிதாக அமைக்க வேண்டும்.

The post விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரத்தில் தீண்டாமை சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: