நீலகிரியில் பருவ மழை துவக்கம் பந்தலூர் பகுதிகளில் கொட்டி தீர்க்கும் கனமழை

*கடும் பனிமூட்டம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் பந்தலூர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் காற்றுடன் கூடிய லேசான சாரல் மழை பெய்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில், ஆண்டு தோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கி தொடர்ந்து மூன்று மாதங்கள் மழை பெய்யும். இம்முறை பருவமழை மிகவும் தாமதமாகவே துவங்கியுது. கடந்த ஒரு வாரமாகவே நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியுள்ளது. தற்போது, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இப்பகுதிகளில் எந்நேரமும் மேக மூட்டம், சாரல் மழை காணப்படுகிறது. பலத்த காற்று வீசி வருவதால், மரங்கள் விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி மற்றும் அவலாஞ்சி போன்ற பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது. பருவமழை துவங்கியுள்ளதால், ஊட்டியில் சாரல் மழை மற்றும் காற்று வீசி வருகிறது. மழை மற்றும் குளிரால், உள்ளூர் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதற்கு ஏற்றார் போல், நேற்று முன்தினம் முதல் பந்தலூர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பருவமழை தாமதமாக துவங்கிய போதிலும் ஊட்டி, குந்தா போன்ற பகுதிகளில் இன்னும் தீவிரமடையவில்லை. சாரல் மழை பெய்து வரும் நிலையில் ஓரிரு நாட்களில் மழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழை துவங்கியுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் மழை தீவிரம் அடைந்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் தண்ணீர் அளவு உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக, மின் உற்பத்திக்கு பயன்படும் அப்பர் பவானி, அவலாஞ்சி மற்றும் பைக்காரா போன்ற அணைகளில் தண்ணீர் அளவு உயர வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீ-ரில்: ஊட்டி 4.7, நடுவட்டம் 14, குந்தா 4, அவலாஞ்சி 53, அப்பர்பவானி 33, கீழ்கோத்தகிரி 20, கூடலூர் 18, தேவாலா 63, பந்தலூர் 87.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பந்தலூர் சுற்று வட்டாரத்தில், பனி மூட்டத்துடன் தொடர் மழை நீடித்து வருகிறது. வாகனங்களில், முகப்பு விளக்குகளை எறிய விட்டவாறு வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இப்பகுதிகளில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. தொடர் மழை பெய்து வருவதால் பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பந்தலூர் உள்ளிட்ட பஜார் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. மழை நீடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், பந்தலூரில் 87 மி.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post நீலகிரியில் பருவ மழை துவக்கம் பந்தலூர் பகுதிகளில் கொட்டி தீர்க்கும் கனமழை appeared first on Dinakaran.

Related Stories: