சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களால் சுரண்டையில் விபத்து அபாயம்

*அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சுரண்டை : சாலைப் போக்குவரத்து விதிகளை மீறி சுரண்டையில் இயக்கப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் நிலவுவதாக குற்றம்சாட்டும் மக்கள், இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பார்களா? என எதிர்பார்க்கின்றனர். தென்காசி மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக நகரங்களில் ஒன்றாக சுரண்டை திகழ்கிறது. இந்நகரை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேலை, கல்வி, மருத்துவம், வியாபாரம் மற்றும் பல்வேறு பணிகள் நிமித்தமாக சுரண்டை வந்து செல்கின்றனர்.

இதனால் சுரண்டை பஸ் நிலையம், காமராஜர் சாலையில் மக்கள் நடமாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. அத்துடன் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதும் வழக்கம். தற்போது சுரண்டை அண்ணா சிலையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலை மற்றும் சுரண்டையில் இருந்து சாம்பவர்வடகரை செல்லும் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சங்கரன்கோவில் செல்லும் சாலையில் மட்டும் வாகன ஓட்டிகள் வசதிக்காக சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.

இந்த சாலையில் புகழ்பெற்ற மருத்துவமனைகள், ஜவுளி நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், வங்கிகள், பள்ளிகள் இருந்ததால் சென்டர் மீடியனில் ஆங்காங்கே இடைவெளி விடப்பட்டு இருந்தது.வாகன ஓட்டிகள் சென்டர் மீடியனில் உள்ள இடைவெளி வழியாக சாலையைக் கடக்கும்போது அவ்வப்போது விபத்துகள் நடப்பது தொடர்கதையாக உள்ளது. இதில் சிக்குவோர் சிறிய காயத்துடன் தப்பித்து வந்தனர். ஆனால் கடந்த இரு மாதங்களில் நடந்த விபத்துகளில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து ஒரு தரப்பினர் சென்டர் மீடியினில் உள்ள இடைவெளியை டிவைடர் வைத்து அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் விபத்து தடுப்பு நடவடிக்கையாக சங்கரன்கோவில் சாலையில் சென்டர் மீடியனில் உள்ள இடைவெளியில் டிவைடர் வைத்து போலீசார் அடைத்தனர். இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சுமார் 1.5 கி.மீ. சுற்றிவர சிரமம் ஏற்படுவதால் டிவைடரில் உள்ள இடைவெளியில் சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களை வாகன ஓட்டிகள் இயக்கிச்ெசல்கின்றனர்.

இதனால் விபத்து நடப்பது தொடர்கிறது. குறிப்பாக சுமார் 1.5 கி.மீ. சுற்றி வருவதற்குப் பதிலாக ஒரு வழிப்பாதையிலே தனியார் மற்றும் அரசு பேருந்துகள் சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. குறிப்பாக காலை நேரத்தில் பள்ளி வாகனங்கள் அதிகமாக வரும்போது ஒரு வழிப்பாதையில் வரும் தனியார் மற்றும் அரசு பஸ்களால் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.

அவ்வாறு விபத்து ஏதும் நிகழ்ந்தால் மிகப்பெரிய அளவில் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுத்து இந்த பிரச்னைக்கு முக்கியத்தீர்வு காண முன்வரவேண்டும். அத்துடன் காலை 7 மணி முதல் 10 மணி வரை சங்கரன்கோவில் ரோடு ஆலடிப்பட்டி விலக்கு மற்றும் அண்ணா சிலை அருகேயுள்ள பகுதிகளில் கூடுதலாக போலீசாரை பணியமர்த்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சுமார் 1.5 கி.மீ. சுற்றிவர வேண்டி இருப்பதால் தற்போது உள்ள பெட்ரோல் விலையில் சாத்திய மற்றதாக தெரிவதால் ஏதாவது ஒரு இடத்தில் சென்டர் மீடியனில் வைத்துள்ள டிவைடரை அகற்றி பாதை ஏற்படுத்தி தர வேண்டும். அந்த இடத்தில் விபத்து ஏற்படாதவாறு வேகத்தடை அல்லது சாலையில் பேரிக்காடு அமைத்து விபத்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர். இதே போல் சுரண்டையில் இருந்து சாம்பவர்வடகரை செல்லும் சாலையில் திருமண மண்டபம் அருகில் மூன்று சாலை சந்திப்பில் பேரிக்கார்டு அமைத்து விபத்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.

குறுகலான சாலை

இதனிடையே சங்கரன்கோவில் சாலையில் இருந்து கோட்டை தெரு வழியாக வந்து நகராட்சிக்கு செல்லும் சாலை பகுதி மிகவும் குறுகலாக உள்ளது. எதிரில் இருசக்கர வாகனம் வந்தால் கூட ஒதுங்குவதற்கு வழியில்லை. எனவே கோட்டை தெருவில் இருந்து நகராட்சி வரை செல்லும் சாலையில் இருபுறம் போக்குவரத்து போலீசாரை நிறுத்தி எதிரில் பேருந்து அல்லது வாகனங்கள் ஏதும் வராத வகையில் நடவடிக்கை எடுத்தால் ஒரு வழி பாதையை பயன்படுத்தாமல் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் சுற்றிவர தயாராக இருப்பதாக கூறுகின்றனர். இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களால் சுரண்டையில் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: