ஜாம்புவானோடை மீன்பிடி துறைமுகத்தில் சிதிலமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்

*மீனவர்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கோரையாறு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள படகு துறையில் அங்கிருந்து கடலுக்கும் அலையாத்திகாடு உள்ள லகூனுக்கும் செல்ல மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கரையிலிருந்து ஆற்றுக்குள் ஒரு சுமார் 50அடி நீளம் உள்ள பாலம் ஒன்று உள்ளது.

சுமார் 20ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழமையான பாலம் தற்பொழுது முற்றிலும் பொழிவுஇழந்து உள்ளது. மேலும் பாலத்தின் தாங்கு பில்லர்கள், கைபிடி சுவர்கள் தூண்கள் முற்றிலும் சேதமாகி பல பகுதிகள் ஒவொன்றாக இடிந்து விழுந்து வருகிறது.

மேலும் சிலாப் பகுதிகளும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாலத்தின் பலபகுதி முற்றிலும் சிமெண்ட் பூச்சுகள் விழுந்து கம்பி வெளியில் தெரிந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. இதில்தான் தினந்தோறும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களும் அதேபோல், இவ்வழியாக ஆசியாவின் மிகப்பெரிய காடான அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளும் படகில் ஏற பயன்படுத்தி வருகின்றனர். சுற்றுலா பயணிகளோ அல்லது அப்பகுதி மீனவர்கள் கிராம மக்களோ நடமாடும்போது பாலத்தின் பகுதிகள் ஏதும் இடிந்து விழுந்தால் மிகபெரிய பாதிப்புகள் ஏற்படும்.

அதேபோல் கைபிடி சுவர்கள் தூண்கள் இடிந்து விழுந்துள்ளதால் சுற்றுலாவுக்கு செல்லும் பயணிகளுடன் வரும் குழந்தைகள் தவறி ஆற்றுக்குள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் குறிப்பாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும்போது இந்த பழமையான பாலம் தண்ணீர் வேகத்தில் அடித்து சென்று எந்தநேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. இதனை சீரமைப்பு செய்து புதுப்பிக்க வேண்டும் என்று மீனவர்களும் சுற்றுலா பயணிகளும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது இதன் அருகே ஒரு கோடி மதிப்பிட்டில் மீன் பிடிதளம் கட்டப்பட்டது. அப்போது கூட இந்த பொழிவு இழந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை.எனவே மீனவர்கள் சுற்றுலா பயணிகள் நலன்கருதி இந்த பழுதடைந்த பாலத்தை சீரமைப்பு செய்து தரவேண்டும் அல்லது இதனை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று இப்பகுதி மீனவர்களும் அதனை சார்ந்து இருக்கிற கிராம மக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஜாம்புவானோடை மீன்பிடி துறைமுகத்தில் சிதிலமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: