தொடர் கோரிக்கை வைத்தும் அம்மன்காவு பகுதிக்கு மின் மாற்றி பொருத்த அலட்சியம்-பொதுமக்கள் அதிருப்தி

பந்தலூர் : பந்தலூர் அருகே அம்மன்காவு பகுதியில் பந்தபிளா, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு குக்கிராமங்கள் உள்ளன. இதில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தொடர்ந்து மின்னழுத்த குறைபாடு இருந்த காரணத்தினால் அடிக்கடி மின்தடையும் ஏற்படும்.மேலும், குடிநீர் தேவைக்கு மின் மோட்டார்கள் பயன்படுத்த இயலாத சூழலும், பொது குடிநீர் முறையாக விநியோகம் செய்ய இயலாமலும் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து சேரங்கோடு ஊராட்சி அம்மன்காவு பகுதியின் 7வது வார்டு உறுப்பினர் சுப்பிரமணி மற்றும் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பிலும் மின்சார வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மின்மாற்றி அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், அம்மன்காவு பகுதிக்கு மின் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் பணிகள் மிகவும் தொய்வாக நடந்தது. இதனால், அதிருப்தி அடைந்த மக்கள் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்து போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நடந்த பேச்சுவார்த்தையில் விரைவில் மின்மாற்றி அமைக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் கம்பிகளில் இழுக்கப்பட்டன. எனினும் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் மாற்றி பொறுத்த கம்பங்கள் நட்டும் மின் வழித்தட கம்பங்களின் கம்பிகளும் பொருத்தப்பட்டன. கம்பிகள் அமைக்கப்பட்டு 2 மாத காலமாகியும் இதுவரை மின் மாற்றி பொருத்தப்படாமல் உள்ளது.

தற்போது, மழை பெய்து வருவதால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. அதுபோல தொடர்ந்து மின்னழுத்த குறைபாடு தொடர்ந்து ஏற்படுகிறது. இதனால், இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, விரைவில் மின்மாற்றி செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்போது அமைக்கப்பட்ட மின் வழிதடத்தில் மூங்கில்கள் வளர்ந்து மின் கம்பியில் சாய்ந்துள்ளது. இதனை வெட்டி அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தொடர் கோரிக்கை வைத்தும் அம்மன்காவு பகுதிக்கு மின் மாற்றி பொருத்த அலட்சியம்-பொதுமக்கள் அதிருப்தி appeared first on Dinakaran.

Related Stories: