டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் கழிப்பறை வசதி இல்லாததால் சுகாதார சீர்கேடு: தொற்றுநோய் பரவும் அபாயம்

சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் அதை ஒட்டிய பார்களில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, உடனே அமைக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் 4701 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றது. இவற்றில் 26,488 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதேபோல், இந்த கடைகளுடன் இணைந்து 1,300க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்களும் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பார்களிலும் பாரின் அளவை பொறுத்து சுமார் 5 முதல் 10 வரையிலான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெருநகரம் மற்றும் நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடை, ஊரின் உட்பகுதிகளில் தான் அமைக்கப்பட்டிருக்கும். இதில் தினம்தோறும் மதுபானங்களை வாங்க வரும் குடிமகன்கள் பிளாஸ்டிக் கப் மற்றும் பாட்டில்களை பயன்படுத்திவிட்டு அருகாமையிலேயே வீசிவிட்டு செல்கின்றனர். இதை அப்புறப்படுத்தவும் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், கடை மற்றும் பார்களில் பணியாற்றும் ஊழியர்கள், கடைகளுக்கு வரும் மதுபிரியர்கள் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் அருகாமையில் உள்ள காலி இடங்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், டாஸ்மாக் கடை மற்றும் பார்களை ஒட்டியுள்ள பகுதிகளில் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழல் உருவாகியுள்ளதையடுத்து பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இதனால், டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், போதிய கழிப்பறை வசதி இல்லாததாலும் தொற்றுநோய்கள் பரவும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர நிர்வாகம் உடனே நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் எந்த ஒரு கடையிலும் கழிப்பறை வசதி என்பது கிடையாது. கடந்த 8 வருடங்களாக டாஸ்மாக் நிர்வாகத்திடம் ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு கழிப்பறை வசதி, சுகாதாரமான குடிநீர் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை நிர்வாகம் இதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிப்பறை மற்றும் சுகாதாரமான குடிநீர் என்பது அடிப்படை தேவையாகும். ஊழியர்களுக்கு இது மறுக்கப்படுகிறது. இதேபோல், நகர் புறங்களை தவிர கிராமப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களிலேயே அதிக அளவில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கிராமப்புற பகுதிகளில் எந்தவிதமான முறையான பராமரிப்பும் கிடையாது. கடைகள் மற்றும் பெரும்பாலான பார்களில் கழிப்பறை வசதி இல்லாததால் அருகில் உள்ள பொது வெளிகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் தொற்றுநோய் பரவுவது எளிதாகிறது. எனவே, ஊழியர்களின் நலன் மற்றும் சுகாதார சீர்கேட்டை கருத்திகொண்டு நிர்வாகம் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.  இவ்வாறு கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: