குட்கா முறைகேடு வழக்கில் கைதான மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சிபிஐ நீதிமன்றம் அதிரடி

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற போதைப் பொருள்களை தமிழகத்தில் தடையின்றி விற்பனை செய்ய அரசு அதிகாரிகள், அமைச்சர் என பலர் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம், குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக 40கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அதனைதொடர்ந்து குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், சிவகுமார், கலால்துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் நீதிபதி 17ம் தேதி (இன்று) வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்தநிலையில் சிறையில் உள்ள மாதவராவ், உமா சங்கர் குப்தா,  சீனிவாசராவ் ஆகியோர் ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சிபிஐ நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் வெளியில் சென்று முக்கிய சாட்சிகளை கலைக்க நேரிடும், மேலும் வழக்கு குறித்து பல்வேறு விசாரணைகள் நடந்து வருவதாலும், ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் உணவு பாதுக்காப்புத்துறை அதிகாரி சிவகுமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு வரும் 23ம் தேதி சிபிஐ பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குட்கா ஜாமீன் வழக்கு:  உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் தனக்கு ஜாமீன் அளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த  மனு நேற்று நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிகாரி செந்தில்முருகன் மாதம் தோறும் குட்கா வியாபாரிகளிடம் ரூபாய் இரண்டரை லட்சம் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி இந்த மனு மீதான விசாரணையை அக்.22ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். இவரது ஜாமீன் மனு சிபிஐ நீதிமன்றத்தில் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: