புனே: இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி புனேவில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இலங்கை, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன் குவித்தது. 20 பந்தில் அரைசதம் விளாசிய கேப்டன் தசுன் ஷனகா நாட் அவுட்டாக 22 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 56 ரன் எடுத்தார். குசால் மெண்டிஸ் 52 (31 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), பதும் நிஷங்கா 33 ரன் அடித்தனர். இந்திய பவுலிங்கில் உம்ரான் மாலிக் 3, அக்சர்பட்டேல் 2 விக்கெட் வீழ்த்தினர்.பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் கில் 5, இஷான்கிஷன் 2, அறிமுக வீரர் ராகுல்திரிபாதி 5, கேப்டன் ஹர்திக் பாண்டியா 12, தீபக் ஹூடா 9 ரன்னில் வெளியேற 57 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சூர்யகுமார்யாதவ், அக்சர்பட்டேல் அதிரடியாக ஆடி சரிவில் இருந்து மீட்டனர். சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 51 ரன் அடித்து வெளியேற 20 பந்தில் முதல் அரைசதம் அடித்த அக்சர் பட்டேல், 65 ரன்னிலும் (31 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்), ஷிவம் மாவி 26(15பந்து) ரன்னிலும் கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தனர். 20 ஓவரில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களே எடுத்தது. இதனால் 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.இலங்கை பவுலிங்கில் கசுன் ராஜிதா, ஷனகா, மதுஷங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஷனகா ஆட்டநாயகன் விருது பெற்றார். இதுபற்றி இந்திய கேப்டன் ஹர்திக்பாண்டியா கூறுகையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நாங்கள் பல தவறுகள் செய்திருக்கிறோம். குறிப்பாக பவர் பிளேவில் நாங்கள் விளையாடிய விதம் எங்களை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது. நாங்கள் பல அடிப்படையான தவறுகளை செய்துவிட்டோம். ஒரு வீரருக்கு நல்ல தினம், கெட்ட தினம் வரலாம். ஆனால் எது அடிப்படையோ அதனை நாம் சரியாக செய்ய வேண்டும். அடிப்படையில் தவறு செய்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.கிரிக்கெட்டில் எந்த வடிவத்திலும் நோபால் என்பது ஒரு குற்றம். அர்ஷ்தீப் சிங் அதனை திருத்திக் கொள்வார் என நம்புகிறேன். இதற்காக அர்ஷ்தீப் சிங்கை நான் கடுமையாக விமர்சிக்க விரும்பவில்லை. முதலில் அடிப்படை விஷயத்தை கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் நமக்கு வெற்றியை பெற்று தரும். நோபால் வீசியது எங்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியது. அவர் ஏற்கனவே இதுபோன்ற நிறைய நோ பால்களை வீசி இருக்கிறார். எனினும் இதனை ஒரு பாடமாக கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து யோசிப்போம்.ராகுல் திரிபாதி 3வது வரிசையில் விளையாடுவது வழக்கம். அணிக்குள் யாராவது புதிதாக வரும்போது அவர்களுக்கு ஒரு பாத்திரத்தையும் வசதியான இடத்தையும் தருகிறோம். சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் விளையாடிய விதம் நிச்சயம் எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. எனினும் நாங்கள் முன் வரிசையில் கொஞ்சம் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி இருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருப்போம், என்றார். இலங்கையின் இந்த வெற்றி மூலம் தொடர் 1-1 என சமனில் இருக்க கடைசி போட்டி நாளை ராஜ்கோட்டில் நடக்கிறது….
The post அர்ஷ்தீப்சிங்கை கடுமையாக விமர்சிக்க விரும்பவில்லை: கிரிக்கெட்டில் எந்த வடிவத்திலும் நோபால் என்பது ஒரு குற்றம்: கேப்டன் ஹர்திக் பாண்டியா காட்டம் appeared first on Dinakaran.