ஆபத்தை உணராமல் விடுமுறை நாட்களில் ஏரி, குட்டைகளில் மீன் பிடிக்கும் சிறுவர்கள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. பகல் இரவு நேரங்களில் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான ஏரிகள் ஆறு, குளம், குட்டைகள், அனைத்தும் நிரம்பி வழிகிறது குறிப்பாக ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, ஆண்டியப்பனூர் அணை, மயில் பாறை பகுதி. ஏழு அருவி நீர் வீழ்ச்சி உள்ளிட்டவைகளில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் ஏரி, குளங்கள் அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் குழந்தைகளையும் அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு தெரிவித்திருந்தார். செய்தி அறிக்கையின் மூலமாகவும் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி செயலாளர்கள் வீடு வீடாக நீர் பிடிப்பு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறுவர்கள் ஏரி, குளம், குட்டை ஆற்றுப்பகுதிக்கு சென்று தூண்டில் அமைத்து மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆழம் தெரியாமல் ஏரிப் பகுதிக்கு சென்று மீன்பிடிப்பதால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஏரியில் குளிக்க சென்ற மாணவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மாவட்டத்தில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஏரிகளில் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் மீன் பிடிக்க செல்வதும், ஏரியில் நீச்சல் அடித்து விளையாடிச் செல்வதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதை தடுக்க மாவட்ட முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளிகளிலும் மாணவர்களுக்கு அதிக அளவில் தண்ணீர் தேங்கும் இடத்திற்கு செல்லக்கூடாது என்று ஆசிரியர்களும் அறிவுறுத்த வேண்டும். அதற்கு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் மீது கவனிப்புடன் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஆபத்தை உணராமல் விடுமுறை நாட்களில் ஏரி, குட்டைகளில் மீன் பிடிக்கும் சிறுவர்கள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: