டோக்கியோ: இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் ஜப்பானில் நடந்த அனிமே விருதுகள் விழாவில் கலந்துகொண்டார். கடந்த 2017ல் தொடங்கப்பட்ட இந்த அனிமே விருது விழாவில், உலக அளவில் சிறந்த அனிமேஷன் படங்கள், வெப்தொடர்கள், கதாபாத்திரங்கள், இசை, பின்னணி குரல், இயக்குனர்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2024க்கு பிறகு 2வது முறையாக ராஷ்மிகா மந்தனா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இம்முறை ‘பிளாக் பாந்தர்’ நடிகர் வின்சன் டியூக் என்பவருடன் இணைந்து, சிறந்த அனிமேஷன் விருதை அவர் வழங்கினார். இவ்விழா குறித்து வின்சன் டியூக் தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இதுவே எனது முதல் ஜப்பான் பயணம். எனது வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
இவ்வளவு செழுமையான கலாச்சாரத்தில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதும், அத்தனை அற்புதமான மனிதர்களை சந்தித்ததும் எனக்கு ஒரு கனவுலக அனுபவமாகவே தோன்றியது. ஈடு இணையற்ற ராஷ்மிகா மந்தனாவுடன் இந்த தருணத்தை பகிர்ந்துகொண்டதும் இதில் அடங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். உடனே இதற்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா, ‘உங்களை சந்தித்ததில் எனக்கும் அதிக மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. டோக்கியோவில் உங்கள் பொழுதை மகிழ்ச்சியாக செலவிடுங்கள். நாம் மீண்டும் சந்திப்போம்’ என்று சொல்லியிருக்கிறார்.
