டங்கனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் – பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகும் ஹீ- மேன்!

உலகம் முழுவதும் பல தலைமுறைகளாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் பிரபல கற்பனை அதிரடி கதாபாத்திரமான ஹீ-மேன் மீண்டும் திரையரங்குகளில் களமிறங்கவுள்ளது. ஜூன் 5, 2026 அன்று வெளியாகவுள்ள ‘ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ்’ திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் தமிழ் டப்பிங் குரல் கலைஞர்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல பின்னணிப் பாடகர் கார்த்திக், ஹீ-மேன் கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்துள்ளார். தனது குரல் வளத்தாலும், பல மொழிகளில் பாடிய அனுபவத்தாலும் ரசிகர்களிடையே தனி இடம்பிடித்துள்ள கார்த்திக், முதன்முறையாக இந்த புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கு குரல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரமான ஸ்கெலட்டருக்கு நடிகர் ஆதித்யா மேனன் குரல் கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களின் மூலம் கவனம் பெற்ற அவர், இந்தப் படத்திலும் அதே கதாபாத்திரத்திற்கு மூன்று மொழிகளில் குரல் வழங்கியுள்ளார்.

மேலும், அறிவார்ந்த போர்வீரரும் வழிகாட்டியுமான டங்கன் கதாபாத்திரத்திற்கு நடிகர் அர்ஜுன் சர்ஜா குரல் கொடுத்துள்ளார். திரையுலகில் ‘ஆக்ஷன் கிங்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுன், தனது கம்பீரமான குரல் மூலம் அந்தக் கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கார்த்திக், ஆதித்யா மேனன் மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோரின் குரல் பங்களிப்பு, தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கற்பனை உலகம், அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளுடன் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ் ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்தின் ஆதரவுடன் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் டிராவிஸ் நைட் இயக்கியுள்ளார். ஹீ-மேன் உலகின் முக்கிய கதாபாத்திரங்களான இளவரசர் ஆடம், டீலா, ஸ்கெலட்டர், டங்கன் உள்ளிட்ட பலர் இடம்பெறும் இந்த திரைப்படம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய தலைமுறைக்காக மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படம், ஜூன் 5 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related Stories: