ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணின் படம் ரூ.200 கோடி நஷ்டம்

அமராவதி: ஆந்திரா துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத்சிங்’ படம் ரூ.200 கோடி நஷ்டத்தை சந்திக்கும் என வினியோகஸ்தர்கள் எச்சரித்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் முன்னணியில் ஸ்டாராக இருக்கும்போது திடீரென அரசியலுக்கு வந்தவர் பவன் கல்யாண். முதல் தேர்தலில் தனித்து நின்று 8 சதவீத வாக்குகளை பெற்றார். சினிமாவில் தனக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதால் முதல்வர் நாற்காலியில் அமரலாம் என பவன் கல்யாண் போட்ட கணக்கு அடுத்தடுத்து தேர்தலிலும் தவறியது.

இதனால் கடந்த முறை ஆந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜவுடன் கூட்டணி அமைத்தார். கணிசமான தொகுதிகளை வென்றார். அவரை துணை முதல்வராக்க பாஜ சம்மதம் தெரிவித்தது. துணை முதல்வர் ஆனபிறகு, இந்துத்துவ கொள்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பவன் கல்யாண் நடித்த ‘உஸ்தாத் பகத் சிங்’ படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. தனது மாஸ் காரணமாகவும் தனது அரசியல் செயல்பாடுகளாலும் இந்த படத்துக்கு பெரும் ஓபனிங் கிடைக்கும் என பவன் கல்யாண் நம்பியிருந்தார்.

தொடர்ந்து படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். ஆனால் எதிர்பார்த்ததுபோல் நடக்கவில்லை. இந்த படம் எதிர்பார்த்த ஓபனிங்கை பெறவில்லை. பாக்ஸ் ஆபீசில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. 5 நாளில் உலகம் முழுவதும் ரூ.74 கோடி வசூலித்து, தனது கணக்கை படம் முடித்துக்கொண்டிருக்கிறது. திங்கள் முதல் படம் ஓடும் தியேட்டர்கள் காற்று வாங்குகிறது. கிட்டத்தட்ட ரூ.200 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வினியோகஸ்தர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

Related Stories: