கடந்த 2004ல் ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், அசின். பல்வேறு மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல வெற்றிப் படங்களில் நடித்து ‘நம்பர் ஒன்’ நடிகையாக மாறிய அவர், கடந்த 2016ல் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சிபாரிசு மூலம் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார். பிறகு சினிமாவில் இருந்து விலகி முழுநேர இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அவருக்கு ஆரின் என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி தனது 10ம் ஆண்டு திருமண நாள் விழாவை விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தார்.
இதையொட்டி ராகுல் சர்மா வெளியிட்ட பதிவில், ‘எனது அன்பே… எனது வாழ்க்கையில் நிகழும் அனைத்துக்கும் நீயே ஒரு சிறந்த இணை நிறுவனர். உன்னுடைய வாழ்க்கை பயணத்தில், உன்னுடன் ஒரு துணை நடிகனாக இருப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். ஒரு வளரும் நிறுவனத்தை போல் நமது வீட்டையும், என் இதயத்தையும் நீ திறம்பட வழிநடத்த வேண்டும். நம் வாழ்நாள் முழுவதும், நான் உன் அருகிலேயே இருக்க வேண்டும். நாம் சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். பல வருடங்கள் கழித்து அசின் போட்டோ வெளியானதால், ரசிகர்கள் அதை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
