விக்ரம் பிரபு நடித்து கடந்த 2018ல் ‘துப்பாக்கி முனை’ என்ற படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். அவர் பிரபல கதாசிரியர் ‘அன்னக்கிளி’ செல்வராஜின் மகன் ஆவார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராஜ் அவரது மகன் இயக்கும் ‘கடல்கன்னி’ என்ற படத்திற்கு கதை எழுதியுள்ளார்.இப்படத்தில் ஆண்ட்ரியா ‘ஜோகி’ என்ற கடல் கன்னி வேடத்தில் நடித்துள்ளார். மேலும் அவருடன் சுனைனா, முனீஷ்காந்த், பிரித்வி, ஜோசிகா மாயா ஆகிய பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். குழந்தைகளுக்கான ஃபேண்டசி படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஜெர்சிர் சில்வஸ்டர் வின்செண்ட் என்பவர் இசை அமைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு கடற்கரையில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.
மேலும் ஆண்ட்ரியாவின் முக்கிய ஆக்ஷன் காட்சிகள் சென்னையில் படமாகி உள்ளது. ஆதரவற்றோர் விடுதியில் வாழும் நீலன் என்ற சிறுவன் ஆண்ட்ரியா எழுதிய ‘ஜோகி’ என்ற புத்தகத்தை படிக்கிறான். அக்கதையில் வரும் கடல் கன்னியை, தனது தாயாக நினைத்துக்கொள்கிறான் அந்த சிறுவன். பிறகு அந்த விடுதிக்கு வரும் எழுத்தாளர் ஆண்ட்ரியாவிடம் கடல் கன்னியை பார்க்க வேண்டும் என்ற தனது ஆசையை கூறுகிறான். அந்த ஆசையை எப்படி நிறைவேற்றுகிறார் ஆண்ட்ரியா என்பதுதான் கதை. உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்ற இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
