வாழ்க்கையில் துணை இல்லை... அதுக்காக கவலை இல்லை: சிம்பு பேச்சு

சென்னை: ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படம், ‘பத்து தல’. ஸ்டுடியோ கிரீன் சார்பில், கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிம்பு பேசியதாவது:   இந்த நிகழ்ச்சியில் நான் அழ மாட்டேன். நிறைய கஷ்டங்களைப் பார்த்துவிட்டோம். இனி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ‘பத்து தல’ ஷூட்டிங் நடந்த போது ஏகப்பட்ட பிரச்னைகள். இப்படமே டிராப் ஆகிவிடும் நிலையில், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் பேசி மீண்டும் படப்பிடிப்பு தொடங்கினோம். இப்படம் எனக்காக வெற்றி பெறுகிறதோ இல்லையோ, கவுதம் கார்த்திக்கிற்காக வெற்றிபெற்றே ஆக வேண்டும். கன்னட ‘முஃப்தி’ படத்தில் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடித்திருந்தார். அவரது கேரக்டரில் என்னால் நடிக்க முடியுமா என்று தயங்கி னேன். அதையும் தாண்டி நான் நடித்ததற்குக் காரணம், எனது தம்பி கவுதம் கார்த்திக். படத்தில் எனக்கு துணை இல்லை.

அது போல் வாழ்க்கையிலும் எனக்கு துணை இல்லை. அதுபற்றி ஒரு கவலையும் இல்லை.  அது சின்ன படமோ, பெரிய படமோ, எதுவாக இருந்தாலும் சரி. அதில் நடித்துள்ளவர்களை அழைத்து பாராட்டுவேன். இங்கு தட்டிவிட நிறையபேர் இருக்கிறார்கள். தட்டிக்கொடுத்து கைதூக்கி விட யாரும் இல்லை. எனக்கு தட்டிக்கொடுக்க எனது ரசிகர்கள் மட்டுமே உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு காட்பாதர். அவருக்கு என்மீதுள்ள அன்பைக் காப்பாற்றுவேன். ஆன்மீகத்திலும் அவரே எனக்கு குரு. முன்பெல்லாம் ‘நான் யாருன்னு தெரியுமாடா’ என்று பேசினேன். அப்போது நிறைய கஷ்டத்தில் இருந்ததால் அப்படி பேசினேன். இப்போது ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்களை மிகப்பெரிய ஹிட்டாக்கி ரசிகர்கள் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், இனிமேல் நான் சாப்ட்டாக மட்டுமே பேசுவேன். பணிவுடனேயே நடந்துகொள்வேன். இனி பேச எதுவும் இல்லை. செயல் மட்டும்தான். இனிமேல் எனது ரசிகர்கள் சந்தோஷமாக இருக்கலாம். நான் உங்களை தலை குனிய விட மாட்டேன்.

Related Stories: