சென்னை: வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருபவர், அதர்வா முரளி. தற்போது சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா நடிப்பில் வரும் 10ம் தேதி வெளியாகும் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இதற்கு முன்னதாக, ஆகாஷ் பாஸ்கரனை ஒரு இயக்குனராகவே எனக்கு தெரியும். தற்போது அவர் படம் தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார். ‘பராசக்தி’ கதையையும், எனது கேரக்டரையும் பற்றி என்னிடம் முதலில் சொன்னவர் அவர்தான். என்மீது அதிக நம்பிக்கை வைத்து, இதுபோல் ஒரு வலுவான கேரக்டரை கொடுத்ததற்கு எனது நன்றி. ஸ்ரீலீலா உற்சாகமான நடிப்பை வழங்கினார். அவரது திறமையான நடிப்பும், நடனமும் இப்படம் வெளியான பிறகு இந்திய படவுலகில் கண்டிப்பாக விவாதத்தை ஏற்படுத் தும். சுதா கொங்கராவை எனக்கு பல வருடங்களாகவே தெரியும். பல கல்ட் மாஸ்டர் பீஸ் படங்களை உருவாக்கிய சுதா கொங்கரா, தன்னை மேடம் என்று யாரும் அழைக்க வேண்டாம் என்று சொன்னார். அவரது பெருந்தன்மை என்னை வியக்க வைத்தது.
எனது நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன், ரவி மோகன். ‘சந் தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் அவருடைய நடனத்தை எனது குடும்பத்தினருடன் பார்த்து ரசித்தேன். பெருமழையில் நனைந்து அவர் தனியாக நடனமாடும் காட்சி மிகவும் பிடிக்கும். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது, தன்னை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார் என்று எனது அம்மா சொல்வார். ரவி மோகன் நடிப்பும், நடனமும் எனக்கு அதை நினைவூட்டியது. நானும் அதை பின்பற்ற முடிவு செய்துள்ளேன். திரையிலும், நிஜத்திலும் சிவகார்த்திகேயன் என்னுடைய சகோதரராகி விட்டார். அவரது அபார வளர்ச்சியை வியந்து பார்த்து ரசித்திருக்கிறேன். அவர் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார். அவரது வெற்றியை பார்த்து பலமுறை சந்தோஷப்பட்டுள்ளேன். நமது மாநிலத்தை வடிவமைத்த மாணவர் இயக்கத்தை பிரதிபலிக்கும் முக்கிய வரலாற்றின் ஒரு பகுதியாகவே ‘பராசக்தி’ படம் உருவாகியுள்ளது.
