படப்பிடிப்புக்கு தயாராகும் சங்கமித்ரா

சென்னை: தொடக்க விழாவுடன் நிறுத்தப்பட்ட சங்கமித்ரா படம், மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் சங்கமித்ரா என்ற படத்துக்கு பூஜை போடப்பட்டது. சரித்திர கதை படமான இதை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்தின் பூஜை, தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. ஆனால் பின்னர் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ஹிட்டானது. இதனால் சரித்திர படங்களை உருவாக்கும் ஆர்வமும் கோலிவுட்டில் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சங்கமித்ராவை மீண்டும் தொடங்க சில தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் பரவியுள்ளது. இந்த படத்தில் நடிக்க இருந்த ஸ்ருதிஹாசன் முன்பே விலகிவிட்டார். அதனால் அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிப்பார் என தெரிகிறது. இந்த படத்தின் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து தனது குழுவினருடன் சுந்தர்.சி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம். படம் எப்போது உருவானாலும் அதற்கு இசையமைத்து தருவதாக ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருக்கிறார். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: