மூலக்கொத்தளத்தில் 1044 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ. 2.5 கோடியில் புதிய மின் இணைப்பு: ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: சென்னை மூலக்கொத்தளம் காட்பாடா பகுதியில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 1044 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதற்கு மின் இணைப்பு வழங்குவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி கலந்துகொண்டு புதிய மின் இணைப்பு பணியை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 1044 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு 2.5 கோடி செலவில் 8 மின் மாற்றிகள், 36 மின் பெட்டிகள் தற்போது அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மேலும் இந்த குடியிருப்புகளுக்கு குடிநீர் கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டு, தொடர்ந்து மக்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்படும். கடந்த ஆட்சி காலத்தில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துறை அமைச்சரிடம் கூறியதன்பேரில் இந்த பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஆணைக்கிணங்க, தற்போது மின் இணைப்பு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அதேபோல், குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும். தற்போது, ராயபுரம் பகுதியில் பருவ மழையில் 95 சதவீதம் மழைநீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் அகற்றி மக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு செய்யப்பட்டு உள்ளது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், பகுதி திமுக செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ராயபுரம் பகுதி திமுக செயலாளர் வ.பே.சுரேஷ். 53வது வார்டு மாமன்ற உறுப்பினர் வேளாங்கண்ணி, வட்ட செயலாளர் கவுரீஸ்வரன், மின்வாரிய பகுதி செயற்பொறியாளர் ஜெயச்சந்திரன், வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்….

The post மூலக்கொத்தளத்தில் 1044 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ. 2.5 கோடியில் புதிய மின் இணைப்பு: ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: