நினைவு தினம், திதி கொடுக்க துபாயிலிருந்து வந்தபோது சோகம் பிரிட்ஜ் வெடித்து அக்கா, தங்கை உள்பட 3 பேர் பலி: 2 பேர் சீரியஸ் போலீசார் விசாரணை

சென்னை: சென்னை அருகே பிரிட்ஜ் வெடித்ததில் அக்கா, தங்கை உள்பட 3 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். துபாயில் இருந்து  நினைவு தினத்தை அனுசரிக்கவும், திதி கொடுக்கவும் வந்தபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகேயுள்ள ஊரப்பாக்கம் கிளாம்பாக்கம், கோதண்டராமன் நகர், ஜெயலட்சுமி தெருவில் வசித்து வந்தவர் கிரிஜா (63). இவரது கணவர் வெங்கட்ராமன், கடந்தாண்டு இறந்து விட்டார். இவரது மகள் பார்கவி (35).  இவரது கணவர் ராஜ்குமார் (47). இவர்களுக்கு ஆராதயா (6) என்ற மகள் உள்ளார். வெங்கட்ராமன் இறந்து விட்டதால், கிரிஜா, பார்கவி, ராஜ்குமார், ஆராதயா மற்றும் கிரிஜாவின் தங்கை ராதா (55) ஆகியோர் துபாய்க்கு  சென்று விட்டனர். அங்கும் இவர்களுக்கு சொந்தமாக வீடு உள்ளது. இதனால், ஊரப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பான கிரிஜாவின் வீடு ஒரு ஆண்டாக பூட்டிக்கிடந்தது.இந்நிலையில், வெங்கட்ராமனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் (இன்று) அனுசரிக்கவும், திதி கொடுப்பதற்காகவும் கிரிஜா குடும்பத்தினர் 5 பேரும் நேற்று முன்தினம் ஊரப்பாக்கம் கிளாம்பாக்கம் கோதண்டராமன் நகர், ஜெயலட்சுமி தெருவில் உள்ள ஆர்ஆர் பிருந்தாவன் அபார்ட்மெண்டுக்கு வந்தனர். தங்களது அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில்தான் தங்கினர். கீழ் தளத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். 2வது தளத்தை வாடகைக்கு விட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டனர். அதன் பின்னர், ஏ.சி.யை ஆன் செய்து விட்டு படுக்கை அறையில் ராஜ்குமார், பார்கவி, ஆராதயா ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். ஹாலில் கிரிஜா, ராதா ஆகியோர் தூங்கி உள்ளனர். இரவில் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், அதிகாலை 3.20 மணியளவில் அப்பகுதியில் மின்சாரம் தொடர்ந்து 3 முறை துண்டிக்கப்பட்டுள்ளது. அப்போது, கிரிஜா தூங்கிக்கொண்டிருந்த ஹாலில் இருந்த பிரிட்ஜ் திடீரென வெடிக்கும் சத்தம்  கேட்டுள்ளது. சிறிது நேரத்தில் அறை முழுவதும் குபுகுபுவென புகை மண்டலம் சூழ்ந்து துர்நாற்றம் வீசியுள்ளது. சத்தம் கேட்டு படுக்கை அறையில் இருந்த ராஜ்குமார் எழுந்து வந்து பார்த்தார். அப்போது, கிரிஜா மற்றும் ராதா இருவரும் படுகாயத்துடன் மூச்சு திணறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை காப்பாற்ற வேண்டும் என ராஜ்குமார் முயன்றுள்ளார். ஆனால், இருவரும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பாத்ரூமிற்குள் ராஜ்குமார் ஓடியுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் அவரும் அங்கு மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.பிரிட்ஜ் வெடித்தபோது படுக்கை அறை, கதவு பூட்டியிருந்ததால், பார்கவி ஜன்னல் வழியாக கையை நீட்டி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார். ஏற்கனவே பிரிட்ஜ் வெடித்து வெடி சத்தம் போன்று கேட்ட நிலையில், கீழ் வீட்டில் இருந்த சுந்தர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பூட்டி இருந்த கிரில் கேட் மற்றும் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, கிரிஜா, ராதா, ராஜ்குமார் ஆகியோர் மூச்சு திணறி பரிதாபமாக  இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மற்றொரு அறையில் பார்கவி, ஆராதயா ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.  தீயை அணைத்து இருவரையும் மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த பார்கவி, ஆராதயா ஆகியோரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும், மீண்டும் வந்ததால் உயரழுத்தம் காரணமாக பிரிட்ஜ் வெடித்துள்ளது. சம்பவத்தன்றுதான் எலக்ட்ரீஷியனை அழைத்து வந்து மின்சார வயர்களை சரிபார்த்துள்ளனர். ஆனால், பிரிட்ஜை மட்டும் சரி செய்யாமல் நாளை பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டதும்  தெரியவந்துள்ளது. விபத்து குறித்து கேள்விப்பட்டதும் காஞ்சிபுரம் எம்பி செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், கலெக்டர் ராகுல்நாத், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்தி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பும் சோகமும் ஏற்பட்டது.* பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் -கலெக்டர்செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விபத்து நடந்த வீட்டை நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒரு ஆண்டாக வீடு பூட்டி கிடந்துள்ளது. துபாயில் இருந்து சமீபத்தில்தான் வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட பின் தூங்க சென்றுள்ளனர். இதில், பிரிட்ஜ் வெடித்து வீடு முழுவதும் காஸ் பரவியுள்ளது. இதனால், அறை முழுவதும் கடும் புகை மூட்டம் சூழ்ந்து மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வகையில், அதிக நாட்கள் பூட்டி கிடக்கும் வீட்டில் மீண்டும் குடியிருப்பவர்கள் எலக்ட்ரீஷியனை அழைத்து வந்து மின்வயர்களை ஆய்வு செய்த பின்னரே குடியிருக்க வேண்டும். குறிப்பாக, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்’’ என்றார்.* பரபரப்பான ஊரப்பாக்கம் பகுதிஊரப்பாக்கத்தில் உள்ள சரஸ்வதி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி நிஷ்மா. இவர், நேற்று முன்தினம் மதியம் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அன்று இரவே காரணை – புதுச்சேரி செல்லும் சாலை ஓரத்தில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் பாலாஜி (எ) மாங்கா பாலாஜி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவங்களுக்கு பிறகு ஊரப்பாக்கத்தில் பிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்து நடந்த இந்த 3 சம்பவங்களால் பரபரப்பு நிலவுகிறது….

The post நினைவு தினம், திதி கொடுக்க துபாயிலிருந்து வந்தபோது சோகம் பிரிட்ஜ் வெடித்து அக்கா, தங்கை உள்பட 3 பேர் பலி: 2 பேர் சீரியஸ் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: