ஆணையிற் கிளந்த மறைமொழி

‘மந்திரம் வலிமையானது’ என்கிறார் பாரதியார். மந்திரம் என்றால் என்ன? “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப’ என்று மந்திரத்துக்கு இலக்கணம் கூறுகிறது தொல்காப்பியம். “நிறைமொழி மாந்தர்” என்பவர்கள் இறைத்தூதர்கள், இறையருள் பெற்ற சான்றோர்கள் ஆவர். “ஆணையிற் கிளந்த மறைமொழி” என்பது இறைவனால் அருளப்பட்ட வேதம் அல்லது வேத வழிகாட்டுதல்கள். வேதத்தின் சொல் என்பது வேத வித்தாகிய இறைவனின் திருவாக்குகள்.

இறைவனின் திருவாக்குகளுக்கு வலிமை இல்லாமல் போகுமா என்ன?  நபிகளார்(ஸல்)அவர்கள் நாம் அன்றாடம் ஓத வேண்டிய வேத மந்திரங்களை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்.

அவற்றில் மிக முக்கியமானது ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்பது.  வேதத்தின் சாரத்தை உள்ளடக்கிய இந்தச் சத்தியப் பிரகடனத்தை யார் மனம், மொழி, மெய்களால் உரைக்கிறாரோ அவர் சொர்க்கம் செல்வார் என்பது நபிமொழி. வேத மந்திரத்தின் - இறைவனின் திருவாக்கின் - மகிமையை உணர்த்தும் எத்தனையோ மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகள் நபிகளாரின் வாழ்வில் நடந்துள்ளன.

அவற்றில் ஒரு நிகழ்வு: இறைத்தூதர் மக்காவைத் துறந்து மதீனாவுக்குப் போவதென்று தீர்மான மாயிற்று. அதற்கு முன்பாக நபிகளாரை எப்படியும் கொலை செய்துவிடுவது என்னும் தீய நோக்குடன் மக்காவின் நிராகரிப்புத் தலைவர்கள் பெரும் சூழ்ச்சி செய்து இரவோடு இரவாக இறைத்தூதரின் இல்லத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். அதிகாலைத் தொழுகைக்கு நபிகளார் வீட்டை விட்டு வெளியேறும் போது அனைவரும் ஒரே சமயத்தில் அவர்மீது பாய்ந்து தாக்கி கொன்றுவிட வேண்டும் என்பது எதிரிகளின் சூழ்ச்சி. பகைவர்கள் இரவு முழுக்கக் கண் அயராமல் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருந்தார்கள்.

அதிகாலை நேரத்தில் நபிகளார் வீட்டை விட்டு வெளியே வந்தார். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தார். இறைவனை நினைத்து பிரார்த்தித்து, அவன் தமக்கு அருளிய வேதத்திலிருந்து பின்வரும் திருவசனங்களை ஓதினார்: “நாம் அவர்களுக்கு(பகைவர்களுக்கு) முன்னால் ஒரு தடுப்பையும் பின்னால் ஒரு தடுப்பையும் எழுப்பி அவர்களை மூடிவிட்டோம்.

ஆதலால் அவர்களால் இனி எதையும் பார்க்க முடியாது.” (குர்ஆன் 36:9) இந்தத் திருவசனத்தை ஓதியபடியே நபிகளார் வீட்டை விட்டு வெளியேறினார். சுற்றிலும் இருந்த பகைவர்களின் கண்களுக்கு அவர் வெளியேறியது தெரியவில்லை. சற்று நேரத்திற்கு அவர்களால் எதையுமே பார்க்க முடியவில்லை. எதிரிகளின் கொலைவெறித் தாக்குதலிலிருந்து தப்பி நபிகளார் பாதுகாப்பாக மதீனா வந்து சேர்ந்தார். மந்திரமாய்ச் செயல்பட்ட வேத வசனம்தான் எத்தனை வலிமை வாய்ந்ததாக இருந்திருக்கிறது!

- சிராஜுல் ஹஸன்     

இந்த வாரச் சிந்தனை

“உண்மையில் இது (குர்ஆன்) ஆற்றல் மிக்க வேதமாகும். அசத்தியம் இதன் முன்னாலிருந்தும் வர முடியாது. பின்னாலிருந்தும் வர முடியாது. நுண்ணறிவாளனும் மிகுந்த புகழுக்குரியவனுமான இறைவனால் இது இறக்கி அருளப்பட்டதாகும்.” (குர்ஆன் 41:41)

Related Stories: