அண்ணல் நபிகளாரின் அன்பு வெள்ளம்

பொதுவாக மனிதராகப் பிறந்த எல்லாருக்கும் அன்பு, கருணை, இரக்கம் போன்ற பண்புகள் ஓரளவேனும் இருக்கத்தான் செய்யும். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கோ இந்த அருட்பண்பு வியக்கத்தக்க வகையில் மேலோங்கியிருந்தது. நபிகள் நாயகம் தம் தோழர்களுடன் நல்ல முறையில் பழகினார். அவர்கள் பல வேலைகளை பகிர்ந்து செய்யும்போது நாயகம்(ஸல்) அவர்களும் தம் பங்கை நிறைவேற்றத் தவறியதில்லை. ஒரு முறை அண்ணல் நபியவர்கள் கூறினார்: “நான் தொழுகையை நீண்ட நேரம் மேற்கொள்ள நினைப்பேன்.

ஆனால், குழந்தையின் அழுகுரல் கேட்டுவிட்டால் தொழுகையை விரைந்து முடித்து விடுவேன். ஏனெனில் நீண்ட நேரத் தொழுகையினால் அக்குழந்தையின் தாய்க்குச் சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக.” (புகாரி) மதீனாவில் உள்ள பள்ளிவாசலில் ஒரு கிராமத்து அரபி வந்து தங்கினார். பள்ளிவாசலிலேயே திடீரென்று சிறுநீரும் கழித்துவிட்டார். நபித்தோழர்கள் அந்த நாட்டுப் புறத்து அரபியை அதட்டி, மிரட்ட முனைந்தார்கள். ஆனால், நபியவர்கள் தம் தோழர்களைத் தடுத்துவிட்டார்கள். நாட்டுப்புற அரபி சிறுநீர் கழித்து முடியும்வரை அண்ணலார் பொறுமையாகக் காத்திருந்தார்.

பிறகு தண்ணீரைக் கொண்டு வந்து இடத்தைக் கழுவித் தூய்மைப்படுத்தினார். “இது இறைவனின் இல்லமாகும். இதை அசுத்தப்படுத்துவது தவறு” என்று நாட்டுப்புற அரபிக்கு எடுத்துச் சொன்னார். தவறைப் புரிந்துகொண்ட அந்த மனிதரும் மனம் வருந்தி, திருந்திச் சென்றார். நபித்தோழர் அனஸ் கூறுகிறார்: “நான் அண்ணலாரிடம் பத்தாண்டுகள் பணி புரிந்தேன். ஒருமுறைகூட இவ்வேலையை ஏன் செய்யவில்லை என்று என்னை கடிந்துகொண்டதே இல்லை.”

ஒருமுறை நபியவர்கள் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஓர் ஒட்டகம் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். அதன் அருகில் சென்று அதை அன்புடன் தடவிக் கொடுத்தார். பிறகு அதன் உரிமையாளரை அழைத்து, “இந்த ஒட்டகத்தின் விஷயத்தில் அல்லாஹ்வுக்கு நீ அஞ்சிக்கொள்” என்று எச்சரித்தார். “இரவு முழுவதும் நின்று வணங்கி, பகல் முழுவதும் நோன்பு வைப்பவர்களைக் காட்டிலும்  நற்பண்புகள் உள்ள ஒரு நம்பிக்கையாளன் சிறந்தவன் ஆவான்” என்றும், “மறுமையில் நீங்கள் உயர் பதவிகளை அடைய விரும்பினால் இவ்வுலகில் உங்களுக்குத் தீமை செய்தவர்களை மன்னித்துவிடுங்கள்.

உங்களுக்கு அளிக்காதவர்களுக்கும் நீங்கள் அளியுங்கள். உங்களை விட்டுப் பிரிந்து செல்வோருடன் நீங்கள் இணைந்து வாழுங்கள்” என்றும் நபியவர்கள் கூறினார். அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அன்பும் கருணையும் அனைத்து மாந்தர்களுக்கும் உரியவை. இறைத்தூதரின் வாழ்விலிருந்து அன்பு, பாசம், கருணை, சகோதரத்துவம் எனும் ஒளிமிக்க நீரோடைகள் தொடர்ந்து பெருகி இவ்வுலகைச் செழிப்பாக்குகின்றன. மறுமை நாள்வரை இச்செழிப்பு நீடித்து நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.

- சிராஜுல் ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

“இறைவா! நிச்சயமாக எனக்கு நானே மிக அதிகமாக கொடுமை இழைத்து விட்டேன். பாவங்களை மன்னிப்பவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனவே நீ பிரத்யேகமாக எனக்கு மன்னிப்பை வழங்குவாயாக. மேலும் என் மீது கருணை புரிவாயாக. திண்ணமாக நீயே அதிகம் மன்னிப்பு வழங்குபவன், கருணை புரிபவன்.’’ (இப்னு மாஜா)

Related Stories: