புண்ணியங்களிலும் ஆண்-பெண் சமமே!

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் சற்று கோபமாகவும் வேகமாகவும் வந்தார். “இறைத்தூதர் அவர்களே, என் தந்தை செய்த காரியத்தைப் பார்த்தீர்களா?’’ என்றார். “என்ன செய்துவிட்டார் உன் தந்தை?” என்று கேட்டார், நபிகளார். “என் இசைவு இல்லாமலேயே எனக்கு மணம் முடித்து வைத்துவிட்டார்.” “அந்தத் திருமணம் செல்லாது. பெண்ணின் சம்மதம் இல்லாமல் செய்யப்படும் திருமணத்திற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. நீ விரும்பினால் அந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளலாம்.

விரும்பாவிட்டால் ரத்து செய்துவிடலாம். முழு உரிமை உனக்கு உண்டு” என்றார், நபிகளார். “நான் அந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறேன் இறைத்தூதர் அவர்களே! இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெண்களின் உரிமையை உறுதிபட நிலைநாட்டவே இந்தப் பிரச்னையைத் தங்களிடம் முறையிட்டேன்” என்றார், அந்தப் பெண். இஸ்லாமியத் திருமணத்தின்போது மஹர் எனும் மணக் கொடையைப் பெண்ணுக்கு மண மகன் கட்டாயம் தந்தே ஆக வேண்டும். மஹர் இல்லாத திருமணங்கள் ஷரீஅத் படிச் செல்லாது. மணமகன் தன் வசதிக்கும் தகுதிக்கும் ஏற்ப இந்த மஹர் தொகையை நிர்ணயிக்க வேண்டும்.

(நம்ம ஊரில் வரதட்சணை கொடுக்க முடியாமல் பெண்கள் தவிப்பதைப் போல முஸ்லிம் நாடுகளில் மஹர் கொடுக்க முடியாமல் ஆண்கள் தவிக்கிறார்கள். ஆண்களின் அந்தச் சோகக் கதை பற்றித் தனிக் கட்டுரையே எழுதலாம்) திருமண உரிமை, கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, மணவிலக்கு உரிமை (ஆண் தரப்பில் தலாக், பெண் தரப்பில் குலா), கல்வி கற்கும் உரிமை, மறுமண உரிமை, சொத்துரிமை என இஸ்லாம் பெண்களுக்கு அளிக்கும் உரிமைகளின் பட்டியல் ரொம்ப நீ..........ளமானது.

ஒருமுறை நபிகளாரிடம் ஒரு பெண் வந்து, “இறைத்தூதர் அவர்களே, ஆண்கள் செய்வது போல் நாங்களும் எத்தனையோ நற்பணிகள் செய்கிறோம். ஆண்களுக்கு நிகராக எங்களுக்கும் நற்கூலி (புண்ணியம்) கிடைக்குமா?” என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு இறைவனே தன் திருமறையில் பின்வருமாறு பதில் அளித்தான்:

“இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழும் ஆண்களுக்கும் பெண்களுக்கும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும், இறைவனுக்கு அடிபணிகின்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும், வாய்மையாளர்களான ஆண்களுக்கும் பெண்களுக்கும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும், இறைவனின் திருமுன் பணிந்து நிற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும், தானதர்மம் செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும், நோன்பு நோற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும், தங்களின் வெட்கத்தலங்களைக் காத்துக்கொள்ளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும், இறைவனை அதிகம் நினைவுகூறும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திண்ணமாக இறைவன் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் தயார்செய்து வைத்துள்ளான்.” (குர்ஆன் 33:35)

- சிராஜுல் ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

“பெண்களிடம் யார் நல்லவிதமாக நடந்துகொள்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவர்” நபிமொழி.

Related Stories: