சீகாளத்தி (காளஹஸ்தி): அறிந்த தலம் அறியாத தகவல்கள்

சீகாளத்தி (காளஹஸ்தி)

* பெயர்க்காரணம்

சிலந்தி, பாம்பு, யானை எனும் மூன்றும் வழிபட்டு நற்கதி அடைந்த திருத்தலம் இது. அதன் காரணமாகவே, சீ(சிலந்தி) காள(பாம்பு) அத்தி(யானை) - சீகாளத்தி எனப்பெயர் பெற்றது.

* ஒன்றாக

இங்கே ராகுவும் கேதுவும் ஒன்றாகவே எழுந்தருளி இருக்கிறார்கள். இது இங்கு மட்டுமே உள்ள சிறப்பு. நவக்கிரகங்களுக்கு எனத் தனிச் சந்நதி கிடையாது.

* கவச ஏணி

சுவாமிக்குக் கவசம் சார்த்தியதைப் போன்ற ஓர் அமைப்பை இங்கு காணலாம். அது ஒன்பது படிகள் கொண்ட ஏணியைப் போன்ற அமைப்பில் இருக்கும். நவக்கிரகங்களும் இடம்பெற்ற ஏணி அது. ராகுவும் கேதுவும் தனியே தெரிவதற்காக கடைசி இரு படிகள் மட்டும், சற்று விலகியபடியே உள்ளன. நவக்கிரக, ராகு - கேது பரிகாரத் தலம் இது.

* ஒன்பதும் மூன்றும்

முன் சொன்ன கவசமான ஒன்பது படிகள் அந்த ஏணியில், படிக்கு மூன்று நட்சத்திரங்களாக இருபத்தேழு நட்சத்திரங்களும் மூல விக்கிரகத்தில் இடம் பெற்றிருப்பது இந்த கோயிலின் தனிச்சிறப்பு. நவக்கிரகத் தோஷங்களுடன், நட்சத்திரத் தோஷங்களையும் நீக்கி அருள் புரியும் திருத்தலம் இது.

* அப்பரின் காளத்தியான்

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் - என்றெல்லாம் சொல்லி, சிவபெருமான் எழுந்தருளி உள்ள இடங்களைப் பாடி வந்த அப்பர் சுவாமிகள், பாடலை நிறைவு செய்யும்போது, `காளத்தியான் அவன் என்கண் உளானே’ என்று, காளத்தி ஈசரைத் துதித்துப் பாடியிருக்கிறார்.

* ஐந்தில் ஒன்று

தென்(தட்சிண)கைலாயம் எனப் போற்றப்படும் இந்த திருத்தலம், பஞ்சபூதத் திருத்தலங்களில் ‘வாயு’ திருத்தலமாகப் போற்றப்படுகிறது.

* வாயு நிரூபணம்

கருவறையில் சிவலிங்கத்தின் அருகில், நந்தா விளக்கு ஒன்று மட்டும் காற்றில் மென்மையாக அசைந்தபடி எரிந்து கொண்டிருக்கும்.

* பாதி பாதி

மதுரையில் சோமசுந்தரப் பெருமானான சிவபெருமானிடம் வாதாடிய நக்கீரர், சாப விமோசனம் பெற்று கைலாய தரிசனம் பெற்ற இடம் இது. ‘கயிலை பாதி காளத்தி பாதி’ என்று ஓர் அற்புதமான அந்தாதி நூல் பாடி, நக்கீரர் துதித்த திருத்தலம் இது.

* நான்கில் ஒன்று

சிவஞானத்தை அருள வல்ல திருத்தலங்கள் நான்கு என்று சொல்லப்படும். காசி, சிதம்பரம், விருத்தாசலம், காளத்தி எனப்படும். அந்த நான்கில் ‘காளத்தி’யும் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது.

* இரண்டில் ஒன்று

நியமத்துடன் ஒரு நாளாவது வசிப்பவர்களுக்கு, கலியால் விளையும் தீமைகளை நீக்கிப் பிறவித் துயரத்தையும் நீக்கக்கூடிய திருத்தலங்கள் இரண்டு. ஒன்று காசி; அடுத்தது காளத்தி. கலியின் கொடுமைகளை நீக்குவதோடு பிறவித் துயரையும் நீக்கக் கூடிய திருத்தலம் இந்தக் காளத்தி.

* சுவாமியின் திருப்பெயர்கள்

காளகத்தீஸ்வர நாதர், தென் கயிலை நாதர், திருக்காளத்தி நாதர், ஐங்குடுமித்தேவர், ஐந்து கொழுந்து, குடுமித்தேவர், ஆராவமுது, கணநாதர், கல்லாலடியார், கல்லாலடியிற் கரும்பு, மருந்து, மலைமேல் மருந்து, காபாலி, காளத்தி, காளத்திக் கற்பகம், சோதி விடங்கர், பொன்முகரித் துறைவர். (அழகானத் தமிழ்ப்பெயர்கள் ஆண் குழந்தைகளுக்கு வைக்கலாம்)

* அன்னையின் திருப்பெயர்கள்

ஞானப்பிரசூனாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானக்கொழுந்து, ஞான சுந்தரி, ஞானப்பேரொளி, சிற்புட்ப கேசி, வண்டார் குழலாள். (அழகான பெயர்கள். பெண் குழந்தைகளுக்குச் சூட்டலாம்)

* தல விருட்சங்கள்

இரண்டு விருட்சங்கள் இங்கே தல விருட்சங்களாக உள்ளன. ஒன்று அகண்ட வில்வம்; இரண்டாவது கல்லால விருட்சம். அகண்டவில்வம் என்பது அபூர்வமானது. ஒரே காம்பில் மூன்று மூன்றாக இதழ்கள் கொண்ட (21-இதழ்கள் கொண்ட) அபூர்வமான வில்வமரம், இங்கே தல விருட்சமாக உள்ளது. கல்லால விருட்சம் என்பது விழுதுகளே இல்லாத விருட்சம். சிவபெருமான் கல்லால விருட்சத்தின் அடியில் அமர்ந்து, சனகாதி முனிவர்க்கு உபதேசம் செய்ததைக் கந்த புராணம் விரிவாகவே சொல்கிறதே! இங்குள்ள கல்லால விருட்சத்தின் அடியில் அமர்ந்து, சில நிமிடங்களாவது ஜபம் செய்தால் அது பன்மடங்கு பலனளிக்கும்.

 

* திசை மாறியது

பொன்முகலி ஆறு இங்கே உத்தர வாகினியாகத் திசை மாறி ஓடுகிறது. இப்படிப்பட்ட நதியில் நீராடுவது பெரும் நன்மையை அளிக்கும். ஒரு சில இடங்களில் மட்டும் உத்தர வாகினியாக ஓடும் நதி, இங்கே காளத்தியில் உள்ளது, நாம் செய்த புண்ணியம்.

* ஐம்பத்தொன்றில் இது ஒன்று    

இங்கே அம்பிகை ஞானப்பிரசூனாம்பிகை எழுந்தருளி இருக்கும் இந்த திருத்தலம், 51 - சக்தி பீடங்களில் ஒன்று. ஜாலந்தர பீடம் எனப் பிரசித்தி பெற்றது.

* அர்ஜுனனும் ஆறு நாள் வேடனும்

பரமசிவ பக்தனான அர்ஜுனன் மறுபிறவியில் கண்ணப்பராய் அவதரித்து, ‘அன்பே சிவம்’ என்ற அன்பு நெறியால் இறைவனை வழிபட்டு, ஆறே நாளில் முக்தி பெற்றார். இந்தக் கண்ணப்பருடைய புகழைப் பட்டினத்தார், ஆதிசங்கரர் எனப் பெரும் துறவியர்களே வியந்து பாடிப் புகழ்ந்திருக்கிறார்கள்.

* ஆதிசங்கரரும் அன்னையும்

இங்குள்ள ஞானப்பிரசூனாம்பிகை எதிரில், ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்து அம்பிகையின் சக்தியை ஒருமுகப்படுத்தினார் ஆதிசங்கரர் என்பது வரலாறு.

* அகத்தியரும் ஐங்கரனும்

இங்குள்ள பாதாள விநாயகர், அகத்தியரால் வழிபடப்பட்டு அகத்தியரின் வேண்டுகோளை நிறை வேற்றியவர். அதேபோல இன்றும் இங்குவந்து வழிபடும் அடியார்கள் தங்கள் வேண்டுகோள் நிறைவேறப் பெறுகிறார்கள்.

* திருப்பும் திருத்தலம்

இங்குள்ள மலைச்சரிவு ஒன்றில் மணி கண்டேஸ்வரர் கோயிலும், அருகில் மலையைக்குடைந்து உண்டாக்கிய மண்டபம் ஒன்றும் உள்ளன. இதற்கு `மணிகர்ணிகா கட்டம்’ என்று பெயர். பெண் ஒருத்திக்கு சிவபெருமான் தாரக மந்திர உபதேசம் செய்த இடம் இது. கடைசி காலத்தை நெருங்குபவர்களைக் கொண்டு வந்து, இந்த மண்டபத்தில் வலது பக்கமாக (இடது காது மேலே இருக்கும்படியாக) ஒருக்களித்துப் படுக்க வைத்தால், உயிர் பிரியும்போது உடல் திரும்பி, வலது காதின் வழியாகவே வெளியேறும். அதாவது இன்றும் இங்கே ஈசன், வலது காதில் தாரக மந்திர உபதேசம்செய்து அருள் புரிகிறார். இதைக் கண்ட அனுபவசாலிகள் பலர் உண்டு.

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

Related Stories: