தரித்திரத்தை விலக்கி குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்க செய்வாள் அன்னை சாமுண்டீஸ்வரி..!!

அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையிலும் மாலையில் சந்திரோதயத்துக்குப் பின்னரும் ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவியை விளக்கேற்றி வழிபட்டு வந்தால், இல்லத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகளும் தீயசக்திகளும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மகிஷாசுரன் எனும் அரக்கன், கண்ணில் படுபவர்களையெல்லாம் கொடுமைப்படுத்தி வந்தான். முனிவர்களின் தவத்தைக் கலைத்தான். இந்திரர்களுக்கு பயம் கொடுத்து நிம்மதியைக் குலைத்தான். சிவபெருமான் குறித்து கடும் தவம் இருந்து மகிஷாசுரன் வரம் பெற்றிருந்தான். அவனுடைய தவத்துக்கு சிவபெருமான் கொடுத்த பலனாக அமைந்தது வரம். மகிஷாசுரன், சாகாவரம் கேட்க, அப்படியே ஆகட்டும் என அருளினார் சிவனார். அதேசமயம், ஆண்களாலும் விலங்குகளாலும் தண்ணீராலும் உனக்கு மரணம் ஏற்படாது என வரம் தந்தருளினார்.

இந்த வரம் கிடைத்ததும்தான், மகிஷாசுரனின் ஆட்டம் இன்னும் அதிகரித்தது. தேவர்களையும் முனிவர்களையும் மக்களையும் துன்புறுத்தி வந்தான். இதில் கலவரம் அடைந்த தேவர்களும் முனிவர்களும் சிவனார் கொடுத்த வரத்தையும் விவரங்களையும் பார்வதிதேவியிடம் சொல்லி முறையிட்டார்கள். ஆண்களால் மரணமில்லை, விலங்குகளால் மரணமில்லை. தண்ணீரால் மரணமில்லை என்பதைப் புரிந்து கொண்ட பார்வதிதேவி சிரித்தாள். ‘மகிஷாசுரனுக்கு பெண்ணால்தான் அழிவு, என்னால்தான் அழிவு’ என உறுதியாகச் சொன்னாள். அப்படி பராசக்தியானவள், மகிஷாசுரனை அழிக்க எடுத்த அவதாரமே ஸ்ரீசாமுண்டீஸ்வரி.

சாமுண்டீஸ்வரி எட்டுத் திருக்கரங்களை உடையவள். தன் அனைத்துக்கரங்களாலும் தீய சக்திகளை அழிக்கிறாள் என்கிறது சாஸ்திரம். சக்தி வழிபாட்டில், சாமுண்டீஸ்வரி உக்கிரமானவள் என்றே விவரிக்கப்பட்டுள்ளது. அசுரனை அழிக்கும் பொருட்டு, பார்வதிதேவியானவள், கடும் ஆக்ரோஷத்துடன் அவதரித்தாள். அப்படி அவள் எடுத்த அவதாரமே சாமுண்டீஸ்வரி. அதனால்தான் கடும் உக்கிர ரூபினியாகத் திகழ்ந்தாள் ஸ்ரீசாமுண்டீஸ்வரி.

மகிஷாசுரனை அழித்த பின்னரும் கூட சாமுண்டீஸ்வரியின் உக்கிரம் தணியவில்லை. பின்னர் தேவர்களும் முனிவர்களும் அவளை சாந்தப்படுத்தினார்கள் என விவரிக்கிறது புராணம். மகிஷாசுரன் என்பவன் வாழ்ந்த ஊர், மகிஷா என்றாகி பின்னர் மைசூர் என்றானதாகச் சொல்கிறது புராணம்.

துர்குணம் கொண்டவர்களுக்கும் தீய சிந்தனைகள் கொண்டவர்களுக்கும் உக்கிர ரூபினியாகவும் தன்னை அன்னையாகவே பாவித்து வணங்கும் பக்தர்களுக்கு சாந்த ரூபினியாகவும் இருந்து ஆட்சி செய்கிறாள் சாமுண்டீஸ்வரி.

சாமுண்டீஸ்வரியின் ஸ்லோகங்கள் மிக மிக வலிமையானவை. மகா சக்தி கொண்டவை. மிகுந்த வீரியம் கொண்ட சாமுண்டியை அவளின் ஸ்லோகங்கள் பாராயணம் செய்து வழிபடுவது எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

ஓம் பிசாசத்வஜாய வித்மஹே

சூலஹஸ்தாய தீமஹி

தந்நோ காளி ப்ரசோதயாத்

எனும் ஸ்லோகத்தையும்

ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே

சக்ரதாரிணி தீமஹி

தந்நோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்

என்கிற ஸ்லோகத்தையும் வீட்டில் விளக்கேற்றி சொல்லி வரலாம். குறிப்பாக, செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையிலும் மாலையில் சந்திரோதயத்துக்குப் பின்னரும் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், இல்லத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகளும் தீயசக்திகளும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கவும், இதுவரை இருந்த தரித்திர நிலை விலகவும், தடைகள் அகலவும் நம்மை ஒரு குழந்தையைப் போல் பாவித்து கைதூக்கிவிடுவாள் அன்னை சாமுண்டீஸ்வரி.

Related Stories: