மாசி மாதத்தின் சிறப்புகளும் ராசி பலன்களும்!

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

மாசி 4 (16-2-2023) சுக்கிரன், மீன ராசிக்கு மாறுதல்

மாசி 9 (21-2-2023) புதன், கும்ப ராசிக்கு மாறுதல்

மாசி 26 (10-3-2023) புதன், மீன ராசிக்கு மாறுதல்

மாசி 29 (13-3-2023) சுக்கிரன், மேஷ ராசிக்கு மாறுதல்

மாசி 29 (13-3-2023 பின்னிரவு) செவ்வாய், மிதுன ராசிக்கு மாறுதல்

நான்கு வேதங்களிலும் இதிகாச புராணங்களிலும், தர்ம சாஸ்திரத்திலும் பொதிந்துள்ள சூட்சுமங்களை அறிந்தவரும், அந்த காரணத்தினாலேயே அளவற்ற தேஜஸுடன் (ஒளி), அக்னியைப் போன்று பிரகாசிப்பவரும் , சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கும் அளவற்ற சக்தியை அளிப்பவரும், பூவுலக மக்களின் உயிருக்கு ஆதாரமாகத் திகழ்பவரும்,  சூரியன், தேவர்களின் உலகங்களுக்கு பகல் பொழுதை ஆரம்பித்து வைத்து,சனி பகவானின் ராசி மண்டலமான கும்ப ராசியில் சஞ்சரிக்கும்  காலத்தையே 'மாசி மாதம்'என ஜோதிடக் கலை கூறுகிறது.

சென்ற மாதம் தேவர்களின் உலகங்களுக்குப் பகல் பொழுது ஆரம்பித்துவிட்டதால், அனைத்து உலக மக்களும் மகிழ்ச்சியும், மன நிறைவும், உடல் நலனும் பெற்று வாழ்வதற்காக, தேவர்களின் உலகங்களின் மகரிஷிகள் தேவ கங்கா நதியில் நீராடி, காயத்ரி மகாமந்திரம் ஜெபித்து, சூரியனுக்கு அர்க்யம் விடுகின்றனர். அந்தத் தீர்த்தம்தான், மேகங்களின் மூலம், மும்மாரியாக நமக்குப் பொழிகிறது   என ரிக், அதர்வண மற்றும் 'சூரிய ஸம்ஹிதை' கூறுகின்றன.

மேலும், தட்சிணாயன புண்ணிய காலத்தில், (ஆடி மாதம் முதல் மார்கழி முடிய 6 மாதங்கள்) மரித்து, 'வைதரணி' புண்ணிய நதிக்கரையில், சுவர்க்கத்தின் கதவு திறக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் ஏராளமான ஜீவ முக்தர்கள் வரிசை, வரிசையாக, தர்மராஜரின் தலைநகரான 'வைவஸ்வதம் எனும் நகரில், தை மற்றும் மாசி மாதங்களில் பிரவேசித்து, குழுமியிருப்பதாக ரகசிய கிரந்தங்கள் (நூல்கள்) விளக்கியுள்ளன.

மாசி மாதத்தின் புண்ணிய தினங்கள்!

ஸ்ரீபரமேஸ்வரன் இரவு-பகல் பாராது ஸதா தவத்திலும், தியானத்திலுமே மூழ்கி, தன்னை மறந்த நிலையில், தாங்கள் வந்திருப்பதைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதால்,  தேவர்கள் அனைவரும் மிகவும் மனம் கலங்கினர்.  அம்பிகையினாலும், அவரை தினமும் பூஜிப்பதற்கு இடையூறாக இருந்தது. ஆதலால், அவரது திருவுள்ளமும் (மனதும்)  சபலமடைந்து, அதிதீவிர வைராக்கியத்திலிருந்து விடுபடவேண்டுமென தேவர்கள், கந்தவர்கள், வித்யாதாரர்கள், மகரிஷிகள் அனைவரும் ஒன்றுகூடி உள் மனத்திலும் காம உணர்ச்சியை ஏற்படுத்தும் மன்மதனை அணுகி, அவனது தெய்வீக சக்தியைப் பிரயோகித்து, பரமேஸ்வரனின் மனத்தில் சபல உணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டும் எனப் பிரார்த்தித்தனர்.

இதனால், மன்மதனும் , கடும் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமானின் மீது காம உணர்ச்சியை ஏற்படுத்தும் தனது மலர்க் கணையைப் பிரயோகித்தான். திடீரென்று தவம் கலைந்த பெருமான், தனது கடுந்தவத்திற்கு தடை செய்தவர் யார் எனக் கோபக் கனல் தெறிக்க தனது மூன்று கண்களையும் திறக்க, மன்மதனும் எரிந்து சாம்பலானான். மன்மதனின் தேவியான ரதியின் மனம் துடித்து, தனது கணவரை உயிர்ப்பித்துத் தருமாறு பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து, கண்ணீர் விட்டுக் கதறினாள். தேவர்களும் தங்கள் தவறை மன்னித்தருளும்படி திருக்கயிலையம்பதியிடம் மன்றாடினர்.

மனமிரங்கிய ஈஸ்வரன், மன்மதனை உயிர்ப்பித்து, இனி ரதிதேவியின் கண்களுக்கு மட்டுமே அவன் புலப்படுவான் என சாப விமோசனம் அளித்தருளினர். இந்தத் தெய்வீக நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இது வரும் மாசி 22 (6-03-2023), திங்கட்கிழமையன்று மாசி மகம் வருகிறது. அன்று சிவ பெருமானையும், அம்பிகையையும் திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று தரிசிப்பதும், வீட்டிலேயே பக்தியுடன் வழிபடுவதும் மகத்தான புண்ணியத்தைத் தரும். அன்று விரதம் இருந்து, பூஜிக்கும் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைப் பேறு கிட்டும் என பூர்வ கிரந்தங்கள் கூறுகின்றன.

மகா சிவராத்திரி!

புண்ணிய  தினங்களில் தன்னிகரற்றுத் திகழும் மகா சிவராத்திரியும் இந்த மாசி மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது. கடும் புலிகள் வாழும் அடர்ந்த காடு ஒன்றைக் கடந்து சென்றுகொண்டிருந்த ஒருவனை, அங்கிருந்த புலி ஒன்று பார்த்துவிட்டது. பல நாட்களாகவே புசிப்பதற்கு ஏதும் கிடைக்காமல் பட்டினியுடன் இருந்த அந்தப் புலி, அவனைத் துரத்தியது.  அதிலிருந்து தப்பிப் பிழைக்க,  தலைதெறிக்க   ஓடினான். அருகிலிருந்து மரம் ஒன்றில் ஏறி, அதன் கிளையொன்றில் அமர்ந்துகொண்டான்.  அந்தப் புலியும், அவன் இறங்கி வரட்டும் என அந்த மரத்தினடியிலேயே படுத்துக்கொண்டது! இரவும் வந்துவிட்டது. எங்கு தூக்கத்தில், கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்த அவன், தூங்கி விடாமலிருப்பதற்காக, மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து, கீழே போட்டுக்கொண்டேயிருந்தான்!!

அந்த மரத்தின்கீழ், காட்டுவாசிகளால் வணங்கப்பட்டுவந்த சிவலிங்கம் ஒன்றும் நெடுங்காலமாக இருந்தது. அது மரத்தின் மேலிருந்தவனுக்குத் தெரியாது. அவன் புலியிடம் பயந்து, ஓடிவந்து, மரத்தின்மேல் ஏறியபோதும் அந்தச் சிவலிங்கத்தைக் கவனிக்கவில்லை. மரக்கிளையின் மீது அமர்ந்திருந்தபோதும், இருட்டில் அந்தச் சிவலிங்கம் இருப்பது அவன் கண்களுக்குத் தெரியவில்லை. உறங்கிவிடாமலிருப்பதற்காக, போட்டுக்கொண்டேயிருந்த இலைகள் அனைத்தும் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்துகொண்டேயிருந்தன.

பக்தபராதீனன்!!

பக்திக்குப் பரவசமடையும் பரம தயாநிதியான பரமேஸ்வரன், இரவு முழுதும் மரத்தின்மீது அமர்ந்தவன் பக்தி இல்லாவிட்டாலும், கண் விழித்துத் தன்மீது போட்ட அந்த இலைகளைத் தன் மீது கண்விழித்து, அர்ச்சனை செய்ததாகவே ஏற்று, மகிழ்ந்து, அவனுக்குப் பார்வதி பரமேஸ்வரனாக தரிசனம் அளித்து, ஆட்கொண்டார்; பெறற்கரிய முக்தியையும் அளித்தார், அவர்!! பக்தி இல்லாமலேயே, அவன் பறித்துப் போட்ட பூக்களால், அகில உலகிற்கும் தாய்-தந்தையென பரிவுகாட்டும் அந்தத் திருக்கயிலை எம்பெருமான், பக்தியுடன் பூக்களைக் கொண்டு அர்ச்சித்ததால், தன்னையே தந்தருளும் கருணையுள்ளம் கொண்டவன்.

சிவராத்திரி தினத்தன்று விரதமிருந்து, அன்று இரவில் கண்விழித்து, திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று தரிசித்து, பூஜித்ததால், பல பிறவிகளில் செய்துள்ள பஞ்சமகாபாதகங்களும் விலகும். பிட்டுக்கு மண் சுமந்த பிரான் பக்திக்கு எளிதில் வசமாகிவிடுகிறான். பக்தர்களிடம் அத்தனை பரிவு அவனுக்கு! எடுத்த பிறவிகள் அனைத்திற்கும், உண்மையான துணையல்லவா அந்த பிரபு! அன்றைய தினத்தில் நாமும் அவனைப் பூஜித்து பிறவிப் பயனைப் பெறுவோமாக!! இனி, இம்மாத ராசி பலன்களைப் பார்ப்போம்.

'தினகரன்' வாசக அன்பர்களின் நலன் கருதி, சூட்சும ஜோதிட கிரந்தங்களில் முக்காலங்களையும் உணர்ந்த நமது மாமுனிவர்கள் கூறியுள்ளபடி, மிகத் துல்லியமாகக் கணித்துக் கூறியுள்ளோம்.  மிக எளிய பரிகாரங்களையும், பண்டைய நூல்களிலிருந்து எடுத்துக் கூறியிருக்கின்றோம். செய்வது மிக, மிக எளிது; பலன்களோ அளவிடற்கரியது. நம்பிக்கையுடன் அப்பரிகாரங்களைச் செய்து, சகல நன்மைகளையும் பெற்று, வாழ்வில் மகிழ்ச்சியுடன்கூடிய மனநிறைவைப் பெறுமாறு பிரார்த்தித்துக்கொள்கிறோம்.

சுபக் கிருது வருஷம் மாசி மாத  விசேஷ மற்றும் புண்ணிய தினங்கள்

மாசி 6 (18-2-2023): மகா சிவராத்திரி - விரதமிருந்து, இரவில் பார்வதி பரமேஸ்வரரை பக்தியுடன் பூஜிப்பது, ஏழு பிறவிகளில் செய்த பாபங்களைப் போக்கும்.

மாசி 22 (6-3-2023): மாசி மகம்; காம தகனம் - சதா யோக நிஷ்டையிலேயே அமர்ந்திருந்த திருக்கையிலாய எம்பெருமானின் திருவுள்ளத்தில் சபலம் ஏற்படுத்துவதற்கு முயற்சித்த மன்மதனை அவர் எரித்த தினம். பின்பு, ரதிதேவி மன்றாடியதனால், மன்மதனை உயிப்பித்து, அவளுக்கு மட்டுமே தெரியும்படி கருணைகாட்டிய புண்ணிய தினம். இன்று அனைத்து நீர்நிலைகளிலும் கங்கையும், குரு பகவானும் ஆவிர்பவித்திருப்பதாக புராதன நூல்கள் கூறுகின்றன.

Related Stories: