இந்த வார விசேஷங்கள்

சஷ்டி விரதம் 11.2.2023 - சனி

 

இன்று தை மாதத்தின் தேய்பிறை சஷ்டி விரதம், ஸ்திர வாரமான சனிக்கிழமையில் அமைகிறது. அதுவும் முருகனுக்குரிய சித்திரை நட்சத்திரத்தில் இன்றைய சஷ்டி விரதம் அமைவது மிகவும் சிறப்பு.  தொடர்ந்து சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு அறிவுக்கூர்மையும், ஆற்றலும், செயல்திறனும் கூடும். குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும்.

பெண்களுக்கு திருமாங்கல்ய பலம் கூடும். சஷ்டி விரதம் இருப்பவர்கள் முதல் நாளான பஞ்சமி மதியம் முதலே விரதம் இருப்பது நல்லது. அன்று இரவு பால், பழம் மட்டும் சாப்பிட்டு, அடுத்த நாள் காலை நீராடி, சங்கல்பம் செய்து கொண்டு முருகப் பெருமானுடைய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். மாலை பூஜை அறையில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு மலர் மாலைகள் சாற்றி ஏதேனும் ஒரு நிவேதனத்தை வைத்துப் படைக்க வேண்டும்.

 

தூப தீபங்கள் காட்டி வணங்கி உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இயன்றால் அருகாமையில் உள்ள முருகன்கோயிலுக்கும் சென்று வருவது விசேஷம்.

இன்று சனிபகவானுக்கு உரிய நாள் என்பதால், குச்சனூர் போன்ற திருத்தலங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாலை நேரத்தில் அருகாமையில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று நவகிரக சந்நதிகளை வணங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது.

மக மாயை களைந்திட வல்ல பிரான்

முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே

அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்

சகமாயையுள் நின்று தயங்குவதே.

என்ற கந்தர் அனுபூதி பாடலை பாராயணம் செய்யவும்.

பானு சப்தமி 12.2.2023 - ஞாயிறு

பானு என்றால் சூரியன் என்று பொருள். சஷ்டி திதி எப்படி முருகனுக்கு உரியதோ, அதேபோல சப்தமி திதி சூரியனுக்கு உரியது. சூரியனுடைய கிழமையான ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி வந்தால் அந்த நாள் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும். பொதுவாகவே காலை சூரிய உதயத்தின் போது சூரிய நமஸ்காரம் செய்வதும், சூரிய காயத்ரி சொல்வதும் மிகச் சிறப்பான ஆத்ம பலத்தைத் தரும்.  ஆரோக்கியத்தை வளர்க்கும்.

 

யோகாசன பயிற்சிகளிலே மிகவும் சிறந்த பயிற்சி சூரிய நமஸ்கார பயிற்சி என்று சொல்லுவார்கள். அதிலும் பானு சப்தமி தினமன்று சூரிய வழிபாடு செய்வது மிகச் சிறப்பானது. அன்று மாலை சிவன் கோயிலுக்கோ, பெருமாள் கோயிலுக்கோ சென்று வலம் வர வேண்டும். சூரிய தசை அல்லது சூரிய புத்தி நடப்பவர்கள் அன்றைய தினம் காலை நீராடி சூரியனை வணங்கி பூஜையறையில் கொஞ்சம் கோதுமை, பொங்கல் நிவேதனம் செய்து படைப்பது சாலச் சிறந்தது.

இன்று சுவாதி நட்சத்திரமாக இருப்பதால் நரசிம்மரை வணங்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் மாதாந்திர சுவாதி தின பெரியாழ்வார் புறப்பாடு இன்று நடைபெறும். சில ஆலயங்களில் பெரியாழ்வாருக்கோ அல்லது கருடனுக்கோ அபிஷேகங்கள் நடைபெறுவதும் உண்டு. அதில் கலந்து கொள்வது நல்லது. இன்று காலையில் சூரியனை நோக்கி சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்;

ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி

தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

இதை இன்று மட்டும் அல்லாது தினமும் காலையில் நீராடிவிட்டு கிழக்கு திசை பார்த்து நின்று சூரியப் பகவானை பார்த்து 27 முறை சொல்லவும். அனைத்து நோய்களும் தீர்ந்து உடல் மற்றும் மனோபலம் பெறலாம்.

மாசி மாத பிறப்பு விஷ்ணுபதி புண்ணிய காலம் 13.2.2023 - திங்கள்

12 ராசிகளில் சூரியன் எந்த ராசியில் நுழைகிறாரோ அந்த ராசிதான் அந்த மாதத்தின் பெயராக வழங்கப்படுகிறது.  இதுவரை உத்திராயணத்தின் முதல் ராசியான மகர ராசியில் இருந்த சூரியன் இன்று வாக்கிய பஞ்சாங்கப்படி பகல் 11 மணி 9 நிமிடத்திற்கு கும்ப ராசியில் நுழைகின்றார். கும்ப ராசியில் நுழைந்து சப்தம பார்வையாக தன்னுடைய சொந்த ராசியான சிம்மத்தைப் பார்வையிடுவது என்பது சிறப்பு.

அதே சிம்மத்தை குருவும் ஐந்தாம் பார்வையாகப் பார்வையிடுகின்றார். இப்படி மாசியில் சூரியன் நுழையும் காலம். விஷ்ணுபதி புண்ணிய காலம். அதாவது, விஷ்ணு வழிபாட்டுக்கு உரிய மிக முக்கியமான தினம் ஆகும். வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷ்ணுபதி புண்ணியகாலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷூப் புண்ணியகாலமாகும்.

அன்று முன்னோர்கள் வழிபாடு, திதி கொடுப்பது, குல தெய்வ வழிபாடு மற்றும் தானம் தர்மம் செய்வது மிகுந்த புண்ணிய பலன் அளிக்கும் வல்லமை கொண்டது. விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக சங்கு சக்ரதாரியாகப் பெருமாள் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று

பெருமாளை வழிபட வேண்டும்.

பெருமாள் சந்நதியை 27 முறை பிரதட்சிணம் வருவது விசேஷம். ஆலயங்களில் இந்த நாளில் நடக்கும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு வழிபாடு செய்ய, மனம் அமைதி பெறும். இந்த நாளில் மகாலட்சுமி பூஜை, கோபூஜை ஆகியவை செய்வது மிகவும் பலன் தரும். வீடுகளில் விளக்கேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடுவதும் மிகுதியான பலன்களைக் கொடுக்கும். திருமண வரம் வேண்டும் இளைஞர்கள் தவறாமல் இந்த நாளில் ஆலயம் சென்று வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

ஊன் நேர் ஆக்கைதன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்

யான் ஆய் என்தனக்கு ஆய் அடியேன் மனம் புகுந்த

தேனே! தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்

நானே எய்தப் பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ!

என்ற பாசுரத்தை பாராயணம் செய்யவும்.   

ஷட்தில ஏகாதசி 16.2.2023 வியாழன்

தானத்தில் சிறந்தது அன்னதானம். அதுதான் ஒருவரை போதும் போதும் என்று சொல்ல வைக்கும். அப்படிப்பட்ட அன்னதானம் செய்து அற்புதமான பலன்களை அடைவதற்கான

ஏகாதசி விரதத்தில் ஒன்று ஷட்தில ஏகாதசி. ஆனால், இந்த அன்னதானத்தை ஏகாதசி அன்று செய்யக்கூடாது. துவாதசி அன்று செய்ய வேண்டும். இதற்கு சுவையான கதை உண்டு. மனித உடலோடு தன்னுடைய தவ வலிமையால் மோட்சலோகத்துக்குச் சென்றாள் ஒரு பெண். அங்கே அவளுக்குப் பலவசதிகள் இருந்தாலும், சாப்பிடுவதற்கு ஏதும் கிடைக்கவில்லை.

மிக ஆடம்பரமான மாளிகை கிடைத்தும், வயிற்றுக்கு சோறு இல்லாமல் அவள் மிகவும் துன்பப்பட்டாள்.

இதற்கு என்ன காரணம் என்று நினைத்துப் பார்த்தாள். அவள் பூமியில் மிகவும் செல்வத்தோடு வாழ்ந்த பொழுது பற்பல தான தர்மங்களைச் செய்தாள். ஆனால், வயிறார யாருக்கும் உணவு கொடுத்ததாக அவள் நினைவுக்கு வரவில்லை. அன்னதானம் செய்யாத குறைதான், இப்பொழுது பசியாக வந்து வாட்டுகிறது என்பதை உணர்ந்தாள். அது மட்டுமில்லை. தன்னிடம் சாப்பாடு கேட்டு வந்த ஒரு துறவிக்கு அவள் அன்னம் தராதது மட்டுமல்ல ஆத்திரத்தில் அன்னத்திற்கு பதிலாக மண்ணையிட்ட பாவமும் இப்பொழுது சேர்ந்து கொண்டது.

அவள் துடிப்பது உணர்ந்த ஒரு ரிஷி அவளுக்கு பிராயசித்தம் சொன்னார். அவள் மாசி மாதத்தில் வரும் ஷட்தில ஏகாதசி விரதத்தை முறையாக கடைபிடித்தால் பிராயசித்தம் கிடைக்கும் என்றார். அந்தப் பெண்ணும் ஏகாதசி விரதத்தை மனப்பூர்வமாக இருந்து பெருமாளை வணங்கி அதற்கு அடுத்த நாள் துவாதசி பாரணையின் போது அதிதிகளுக்கு அன்னமிட்டாள் பாவம் தீர்ந்தது.

பசி தீர்ந்தது மட்டுமல்ல நற்கதியும் அடைந்தாள் என்பது ஏகாதசி மகாத்மிய வரலாறு. அப்படிப்பட்ட ஏகாதசி விரதம், குருவாரத்தில் வருகிறது. அதாவது பசிப் பிணி தீர்ப்பதற்கு வழி சொன்ன குருவின் தினமாகிய வியாழக்கிழமை இந்த ஏகாதசி விரதம் வருவது மிக மிகச் சிறப்பு. ஷட் என்றால் ஆறு என்ற பொருள். தில என்றால் எள் என்று பொருள். ஆறு வகையான எள் தானத்தை முன்னிலைப்படுத்தி இருப்பது ஷட்தில ஏகாதசி. இந்த ஏகாதசி நிறைவின் போது (துவாதசியில்) அன்னத்தை அளிப்பதன் மூலமாக பெரும் பலனை அடைய முடியும்.

காரி நாயனார் குருபூஜை 17.2.2023 - வெள்ளி

ஒவ்வொரு நாயன்மாருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதில் காரி நாயனார் தன்னுடைய பூத உடம்போடு கயிலை சேர்ந்து இன்புற்றார் என்பது பெருமை. இதை சேக்கிழார் பெருமான் மிக அற்புதமாக தன்னுடைய பெரிய புராணத்தில் பாடுகின்றார்.

ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி

ஆய்ந்த உணர்விடை அறா அன்பினராய் அணி கங்கை

தோய்ந்த நெடும் சடையார்தம் அருள் பெற்ற தொடர்பினால்

வாய்ந்த மனம் போலும் உடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார்.

அங்கே அவர் ஒளிஉடம்பு பெற்றார் என்பது வரலாறு. காலனை கடிந்து, தன்னை சரணடைந்த மார்க்கண்டேய மகரிஷிக்கு என்றும் பதினாறு என்ற வரத்தை அளித்தவர் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர். அபிராமி அன்னை கோயில் கொண்டுள்ள அத்தலத்தில் பிறந்தவர் காரி நாயனார். செந்தமிழ் கற்றவர்.  நற்றமிழ் கற்ற நாவால் எப்பொழுதும் நமசிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதிக் கொண்டிருப்பவர். நான்கு வகை கவி பாடுவதில் வல்லவர். சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடம் சேர்ந்து, பாடி, பெரும் பரிசுகளைப் பெற்று, அந்த பரிசுகளை எல்லாம் சிவனடியார்களுக்கும் சிவனுடைய திருத்தல தொண்டுக்கும் முழுமையாக பயன்படுத்துபவர். கயிலை நாதனை கண நேரமும் மறவாதவர். அதனால் சிவபெருமான் இவரை நேரடியாக கயிலை பதியை அளித்தார். அவருடைய குருபூஜை தினம் இன்று. மாசி மாதம் பூராடம்.

Related Stories: