தீராப் பிணிகளை தீர்க்கும் வைத்தியநாதர்

உக்கல் திருவண்ணாமலை மாவட்டம்

இறை மகத்துவம் என்பது வெறும் வாய்ச் சொல்லால் விளக்கிட முடியாத ஒன்று. அப்படிப்பட்ட இன்றியமையாத இறைவழிபாடும், இறை வடிவங்களைத் தாங்கி நிற்கும் ஆலயங்களையும் நாம் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். அவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டிய தொண்டை மண்டலத்தின் பொக்கிஷ ஆலயமாகத் திகழ்கிறது உக்கல் ``ஸ்ரீவைத்தியநாத ஸ்வாமி திருக்கோயில்’’. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட ஸ்ரீபெருந்திரனான் என்று போற்றப்பட்ட உக்கல் ஆலயத்தின் பெருமைகளைப் பார்ப்போம்.

காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு பல்லவ நாட்டை, கி.பி. 685 முதல் கி.பி. 705 வரை ஆட்சி செய்தான் பல்லவ மன்னன் இராஜசிம்மன். இவன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்றும் அழைக்கப்பட்டான். சிறந்த சிவபக்தன். காஞ்சிபுரத்திலுள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் மற்றும் மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள குடைவரை ஆலயங்களையும் கட்டிய பெருமையைக் கொண்டவன் இவன். ஒரு சமயம் தீராத வயிற்று வலியால் அவதியுற்றான். இவனது கனவில் தோன்றிய கைலாசகிரிநாதர், சேயாற்றின் அருகில் உள்ள எமது திருத்தலத்தை அடைந்து வழிபாடு செய்ய, உனது தீராத வயிற்று வலி தீரும் என அருள்புரிந்தார்.

அதன்படி சேயாற்றின் வடகரையில் உள்ள உக்கல் திருத்தலத்திற்கு வந்த நரசிம்மவர்மன், ஸ்ரீ வைத்தியநாதப் பெருமானை மனங்குளிற அபிஷேகித்து, பட்டாடைகள் சாற்றி, பல வகை மலர்களால் மாலை தொடுத்து சூட்டினான். பல வகை நைவேத்தியங்களையும், பலகாரங்களையும் படைத்தான். மகிழ்ந்த பரமேஸ்வரர், ஒரு சித்தர் வடிவில் தோன்றி, தல விருட்சமான வில்வத்தை மருந்தாகத் தந்து சாப்பிடச் சொன்னார். சாப்பிட்ட சற்று நேரத்திற்கெல்லாம் வயிற்று வலி காணாமல் போனது. சித்தன் வடிவில் வந்த சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்க நினைத்த அரசன், அவரை எங்கு தேடியும் கிடைக்காததை கண்டு நெகிழ்ந்தான்.

தனக்கு வைத்தியம் பார்த்தது அந்த வைத்தியநாதப் பெருமானே! என்பதை உணர்ந்து, அளவில்லாத ஆனந்தம் அடைந்தான். அதோடு, இந்த கோயிலின் முழு திருப்பணிகளுக்கும் உத்தரவிட்டான். அன்று முதல் இந்த தல ஈசன் ஸ்ரீபெருந்திரனார் வைத்தியநாதர் என்று போற்றலானார். இந்த இரண்டாம் நரசிம்மவர்மன் காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரம் அல்லாது பனமலையிலும் சிவாலயத்தை எழுப்பியுள்ளான். இந்த கோயில்களில் இவனது 250 பட்டப் பெயர்கள் கல்வெட்டின் வாயிலாக காணக் கிடைக்கின்றன.

அப்பட்டப் பெயர்களில் ஒன்று சிவசூளாமணி என்பதாகும். வேதம் ஓதும் அந்தணர்களுக்கென்று பல ஊர்களை அமைத்து, அதை அவர்களுக்கு தானமாகவும் கொடுத்துள்ளதால் ‘‘சிவசூளாமணி’’ என்று பலரால் போற்றப்பட்டான்.  அதுபோல், உக்கலிலும் என நிலங்கள் ஒதுக்கி, நாளும் வேதம் ஓதிட வழிவகை செய்தான். இதனால், உக்கல் அந்த நாளில் நரசிம்மவர்மனின் பட்டப்பெயரோடு ‘உக்கல் சிவசூளாமணிமங்கலம்’ என்று பெயர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கி.பி. 878 முதல் கி.பி. 883 வரை ஆட்சி புரிந்த பல்லவ மன்னன் கம்பவர்மன் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் உட்கர் என வழங்கப்பட்டுள்ளது. கி.பி. 872 முதல் கி.பி. 890 வரை காஞ்சியை ஆண்டது அபராஜிதவர்மன். இவனே திருத்தணிகை முருகன் ஆலயத்தை கட்டிய பெருமைக்குரியவன்.

இவனது ஆட்சிக் காலத்தில் இவ்வூர், ``சிவசூளாமணி மங்கலமாகிய அபராஜிது சதுர்வேதி மங்கலம்’’ என்று அழைக்கப்பெற்றுள்ளது. பின்னர், கி.பி. 894-ல் தொண்டை நாட்டினை ஆட்சி புரிந்த சோழ மன்னனான முதலாம் ஆதித்த சோழன் காலத்திலும், இந்த பெயரே வழக்கத்தில் இருந்துள்ளது. இவ்வூரில் உள்ள திருமால் ஆலய கல்வெட்டில், கி.பி. 999-ல் ஆட்சி புரிந்த முதலாம் இராஜராஜனின் காலத்தில் பராந்தக சோழனின் விருதுப் பெயர்களுல் ஒன்றான விக்கிரமாபரணன் என்பதனை சேர்த்து, ‘‘தனியூர் உக்கலான விக்கிரமாபரணச் சதுர்வேதிமங்கலம்’’ என பதிவிடப்பட்டுள்ளது. பல்வேறு காலகட்டத்தில் பல மன்னர்கள் இந்த உக்கல் ஆலயத்தின் மீது கொண்ட பற்று நன்கு விளக்கப்படுகின்றது.

ஊரின் வடமேற்கு மூலையில் ஆலயம் அமைந்துள்ளது. தென்முகத் தோரணவாயில் நம்மை வரவேற்கின்றது.  இராஜகோபுரம் காணப்படவில்லை. உள்ளே நுழைந்ததும் விசாலமான இடப்பரப்பு. இங்கே நந்தி மண்டபம், பலிபீடம் மற்றும் கொடிமரம் காணப்படுகின்றன. தோரணவாயிலின் நேராக தென்முகம் பார்த்தவாறு அமையப்பெற்றுள்ளது அம்பிகையின் தனிச் சந்நதி. முன் மண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் கருவறை என்கிற அமைப்பில் அம்பாள் சந்நதியுள்ளது.

அம்பிகையாக ஸ்ரீமரகதாம்பிகை அற்புதத் திருமேனி கொண்டு புன்னகை சிந்துகின்றாள். அதன் பின், இறைவனைக் காண செல்கின்றோம். முன் மண்டபம் மிகவும் விசாலமான கருங்கல் திண்ணைகளுடன் கூடியது. கடந்து உள்ளே செல்ல, மகாமண்டபத்தின் வலது - இடது புறங்கள் திறந்தவெளியாக உள்ளது.

வடபுறத் திண்ணை மீது உள்ள ஆதி சாஸ்தாவான ஐயப்பன் சிலை மிகவும் அபூர்வமானது. யோக பட்டையுடன் வலது காலை மட்டுமே மடக்கியபடி தவக்கோலத்தில் வீற்றிருக்கும் ஐயப்பனை இங்கு மட்டுமே காணமுடியும் என்பது விசேஷமாகும். உடன் ஸ்ரீகணபதியும், பைரவரும் உள்ளனர்.

பின், நீண்ட இடை மண்டபம். அதன் வடபுறம் நடராஜர் சந்நதி. உடன் ஏனைய உற்சவ மூர்த்தங்களும் வைக்கப்பட்டுள்ளன. கருவறையுள் பிணி தீர்க்கும் பெருமானாக திருவருள் புரிகின்றார் ஸ்ரீவைத்தியநாத ஸ்வாமி. வழவழ பச்சைக் கல்லிலான பாணம். வட்ட வடிவிலான ஆவுடையார். பார்த்தவுடன் பக்தர்களை தன்பால் ஈர்த்து, உள்ளத்தை உருக வைக்கின்றார். இந்த பெருமான் பெருந்திருக்கோயில் பெருமானடிகள் என்றும், பெருந்திருக்கோயில் மகாதேவர் என்றும், பெருந்திருக்கோயிலுடைய நாயனார் என்றும் அழைக்கபெற்றுள்ளார்.

ஆலய வலம் வருகையில், கோஷ்ட தெய்வங்கள் முறையே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நர்த்தன கணபதி அழகோ அழகு. தென்முகக் கடவுளான ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு சற்றே இடதுபக்கம் திரும்பியபடி கால்மீது கால்மடித்து கலையெழில் கொஞ்ச காட்சி தருகின்றார். தல கணபதியின் சந்நதி ஆலய தென்மேற்கு மூலையிலும், வள்ளி - தெய்வானை உடனான ஸ்ரீசண்முகர் சந்நதி வடமேற்கு மூலையிலும் உள்ளன. கருவறையின் வெளிப்பக்க சுவற்றில் கல்வெட்டு சாசனங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன.

இந்தக் கோயிலில் பரகேசரிவர்மன் கல்வெட்டுகள் இரண்டு காணப்படுகின்றன. கி.பி. 917-ல் முதலாம் பராந்தகன் ஆட்சியில் இவ்வூரைச் சேர்ந்த வணிகன் மருதம்பாக்கிழான் உற்றியாட்டை என்பவன் ஸ்ரீவைத்தியநாதர் ஆலயத்திற்கு நிலம் வழங்கியுள்ளான். வருடந்தோறும் நடைபெறும் பிரம்மோற்சவ திருவிழாவின்போது ஸ்வாமி திருவீதியுலா செலவுகளுக்காக முதலாம் இராஜராஜன் நிலக்கொடை அளித்துள்ளான். அதுபோல, தினமும் தீபத்திற்கு பசுநெய் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியினை தாங்கிய [கி.பி.1045] முதலாம் இராஜேந்திரச் சோழன் கல்வெட்டு ஒன்று கோயிலின் தென்புற சுவற்றில் காணப்படுகின்றன.

அதுபோல், கி.பி.1303 - கி.பி.1322 ஆண்டு ஆட்சிபுரிந்த மூன்றாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், நீண்ட நாளாக பாழடைந்து கிடந்த குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. இதை ஆலய வடகிழக்கு சுவரில் உள்ள கல்வெட்டு மெய்ப்பிக்கின்றது. பராக்கிரம சோழ வாய்க்கால் ஒன்றும் இங்கு இருந்துள்ளதாக இராஜநாராயண சம்புவராயன் கல்வெட்டு விவரிக்கின்றது. சோழர் காலத்தில், ‘‘ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து காலியூர் கோட்டத்து, பாகூர் நாட்டில் தனி ஊராக திகழ்ந்துள்ளது உக்கல். ஏனைய குறுநில மன்னர்களின் கல்வெட்டுகளும் இங்கு பெருமளவில் காணப்படுகின்றன.

இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளின் மூலம் பல அரிய வரலாற்றுச் சம்பவங்களை நாம் நன்கு அறியப்பெறலாம் என்பது உறுதி. அமைதியான சூழலில் அமைந்திருப்பதால் மனம் ஆனந்தத்தில் திளைக்கின்றது. இனிமை சுரக்கின்றது. தல விருட்சமாக வில்வமும், தல தீர்த்தமாக ரோக நிவாரண தீர்த்தமும் திகழ்கின்றன. வருடத்தின் சிறப்பு விழாவாக தைப்பூசத்தன்று 18 ஊர்களில் இருந்து செய்யாற்றில் ஒன்று கூடும் தீர்த்தவாரி உற்சவம் வெகு விசேஷமாக கொண்டாடப்படுகின்றன. அது தவிர, அனைத்து சிவாலய விசேஷங்களும் சிறப்புற அனுசரிக்கப்படுகின்றன. தீராத பிணிகளால் அவதிப்படுபவர்கள், ஸ்ரீவைத்தியநாதருக்கு அபிஷேகித்த ஜலத்தை பருகிட நிவர்த்தி ஏற்படும்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ள உக்கல் எனும் இத்தலம் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உள்ள கூழமந்தலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது.

தொகுப்பு: மோ. கணேஷ்

Related Stories: