மனமும் அறிவும் மேலோங்க!

இந்து மதத்தின் ஆணிவேர் வேதம். அந்த வேதங்கள் சாம, யஜுர், ரிக், அதர்வன என்று சொல்லப்படுகிறது. சிவனுக்கு சிவராத்திரியும், பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசியும் அம்பிகைக்கு நவராத்திரியும் சிறப்பு வாய்ந்த நாட்களாகும். அம்பிக்கைக்காக போற்றப்படும் நவராத்திரி மட்டும் நான்கு வகைகளாக கொண்டாடப்படுகிறது.

நவராத்திரியின் வகைகள்

*வாராஹி நவராத்திரி  

*ஷரன் நவராத்திரி  

*ஷ்யாமளா நவராத்திரி  

*தேவி நவராத்திரி  

ஷ்யாமளா நவராத்திரி: ஷ்யாமளா  நவராத்திரி தை அமாவாசை முதல் ஒன்பது தினங்கள் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ லலிதா மகா திரிபுர சுந்தரியின்  கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையே சியாமளா தேவி. இவள் அறிவு  என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும்  வில்லைக் கொண்டு அறிவு என்னும் தத்துவம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே  ஷ்யாமளா தேவியின் அருள் இருந்தால்தான் மனதையும் அறிவையும் எளிதில் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மந்திரியாகவும்  விளங்குவதால், ஷ்யாமளா தேவிக்கு  மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. தேவியின் ஆலோசனை பெற்றே பரமேஸ்வரி எதையும் செய்வாள். அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் இவள் மன  இருளை அகற்றி  ஞான ஒளியைத் தருபவள். உலகில் முக்கியமானது வாக்கு.

இவ்வாக்கிற்கு ஆதாரமான சக்திகளில் முக்கியமானவள் ஷ்யாமளா தேவி. ஷ்யாமளா  நவராத்திரி காலத்தில், தினமும் வீட்டில் உள்ள அம்பாள் சிலைக்கு அல்லது படங்களுக்கு சந்தனம், குங்குமமிட்டு, மலர்களால் அலங்கரித்து, அபிராமி  அந்தாதி பாராயணம் செய்யலாம். ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் செய்தும் வழிபடலாம்.  ஷ்யாமளா நவராத்திரியில், வசந்த பஞ்சமி திதியில், அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால் துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும்.

தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம், தானியம் பெருகும். சுபிட்சத்தைத்  தரக்கூடியவள். ஷ்யாமளா என்றும், ஸ்ரீ ராஜ ச்யாமளா என்றும், ஸ்ரீமாதங்கி என்றும், ‘மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக  அவதரித்தருளியவள். தசமஹாவித்தைகளுள் ஒன்பதாவது வித்தையாக அறியப்படுபவள்.  கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள்.

வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் ‘மந்திரிணீ’ என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி  செய்து அருளுபவள். இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே ஷ்யாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம்.

வாராஹி நவராத்திரி: ஆனி மாதம் அமாவாசை மறுநாள் முதல் ஒன்பது நாட்கள் தெலுங்கு சம்பிரதாயப்படி ஆஷாட நவராத்திரி என்கிற வாராஹி நவராத்திரி கொண்டாடப்படுகின்றது. வாராஹி அம்மனை நாம் கோபம் நிறைந்தவள் என்று தான் நினைத்துக்  கொண்டிருக்கிறோம். அதனால் பலர் அவளை வீட்டில் வைத்து வழிபட மாட்டார்கள். ஆனால் அவள் குழந்தை மனம் கொண்டவள். தன்னலம் பாராமல், கெட்ட எண்ணங்கள் இல்லாமல் இவளை வணங்கி வந்தால், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் தெய்வம்தான் இந்த வாராஹி அம்மன்.

நோய் பிணி, மனக் கஷ்டம், பணக்கஷ்டம், எப்படிப்பட்ட கஷ்ட காலமாக இருந்தாலும் வாராஹி அம்மனை நினைத்து, தலைவாழை இலை விரித்து, அதில் பச்சரிசியை பரப்பி, தேங்காயை உடைத்து இரண்டு முடிகளையும் வைத்து, அதில் இலுப்ப எண்ணெய் ஊற்றி, சிவப்பு திரி போட்டு, தீபம் ஏற்றினால் போதும் அவளின் மனம் குளிர்ந்து உங்களுக்கு நன்மை பயக்குவாள். இதனை வாராஹி அம்மன் கோயிலிலும் செய்யலாம்.

அல்லது வீட்டிலேயே சிறிய வாராஹி அம்மன் திருவுருவப் படத்தை வைத்து அதன்முன் செய்து வரலாம்.

வாராஹி அம்மனுக்கு சிவப்பு மலர் மிகவும் விருப்பமானது அதிலும் சிவப்பு தாமரை மிகவும் பிடிக்கும். பஞ்சமி திதி அன்று வாராஹியை மனதார நினைத்து வழிபட நல்ல பலனைத் தரும். வாராஹி அம்மனுக்கு பூண்டு கலந்து தோல் நீக்கப்படாத உளுந்து வடை, நவதானிய அடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் நீக்காத தயிர்சாதம், தோசை இவை பிடித்தமானவை. இவளை வழிபட வளம் பெருகும் என்பதால், தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில்

அம்மனுக்கு தினமும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும்.

தொகுப்பு : பிரியா மோகன்

Related Stories: