டி.என்.ஏ- திரைவிமர்சனம்

ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், பிக் பாஸ் ரித்விகா உள்ளிட்ட பலர்  நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் டி என் ஏ. காதல் தோல்வியில் தடுமாறும் ஆனந்த் (அதர்வா), மறுவாழ்வு மையம் வரை சென்று மீண்டு வருகிறார். திவ்யா (நிமிஷா சஜயன்) மனநிலை குறைபாடு என பிறரால் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட பெண். இருவரையும் குடும்பங்கள் இணைத்து திருமணம் செய்கின்றன. திருமணத்திற்கு பிறகு அவர்கள் வாழ்கை புரிதலுடன் செல்ல, அந்த சமயத்தில் குழந்தை பிறப்பும் மகிழ்ச்சி தருகிறது. ஆனால் திவ்யா திடீரென கையில் குழந்தையை வாங்கியவுடன் “ எங்கே என் குழந்தை ” என்பதோடு கதை சூடு பிடிக்கிறது.

அதர்வா தன் மனைவியின் வார்த்தைகளை நம்பி, குழந்தையின் பின்னணியை தேடி செல்கிறார். குழந்தை கடத்தல், அதற்குள்ள காரணம் போன்ற விசயங்களை படத்தின் இரண்டாம் பாதி விவரிக்கிறது. நிமிஷா சஜயன் தனது கண்களின் மூலம் பல உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்துகிறார். அதர்வாவும் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பை இது வரை நாம் பார்த்ததில் சிறந்ததாக சொல்லலாம். பாலாஜி சக்திவேல் போலீஸ் அதிகாரியாக எதார்த்தம். குழந்தை கடத்தும் பெண்மணியாக சாந்தகுமாரி கதையின் முக்கிய அடையாளம் பெறுகிறார். நிச்சயம் வரும் வாரங்களில் அவர் இணையத்தில் டிரெண்டாவார் என தோன்றுகிறது.

பார்த்திபன் டி.எஃப்.டெக் ஒளிப்பதிவு சிறுவழிகள், தேடல் காட்சிகளை நமக்கு நேரில் நிகழ்வதை போல காட்டுகிறது. சாபு ஜோசப்பின் எடிட்டிங் படம் வேகமாக நகர உதவியுள்ளது. பாடல்கள் புதுமையாக இருந்தாலும், மனதில் நிற்க மறுக்கிறது. ஐவர் கூட்டணி இசை புது முயற்சி. ஜிப்ரானின் பின்னணி இசை திரைக்கதைக்கு வலுசேர்க்கிறது. குழந்தை கடத்தல் தொடர்பான பின்னணி, அது எப்படி ஒரு பெரிய சந்தையாக மாறிவிட்டது என்பதை படம் நமக்கு உணர்த்துகிறது. இறுதியில், சமூகத்திற்கு முக்கியமான செய்தியை சொல்லும் படம் இது. திடீர் பக்தி காட்சிகள், சினிமா கிளிஷே மொமெண்ட்கள் சற்றே சோர்வை ஏற்படுத்தினாலும், குடும்ப ரசிகர்களை கவரும் அம்சமாகவே அமைந்துள்ளது.

நெல்சன் வெங்கடேசன் மற்றும் அதிஷாவின் வலிமையான எழுத்துதான் திரைக்கதைக்கான சிறப்பு எனலாம். மொத்தத்தில் டி.என்.ஏ – தெளிவாக எழுதப்பட்ட சமூக பொறுப்பு உணர்வுள்ள குடும்பத் திரில்லர் படமாக மனதைக் கவர்ந்திருக்கிறது .

Related Stories: