பிரச்னைகள் தீா்க்கும் பரிகாரங்கள் கோயில்கள்

? என் மகள் நல்ல பணியில் இருந்தாள். கணவனின் தொடர்ச்சியான அழுத்தத்தால் வேலையை ராஜினாமா செய்து விட்டாள். ஆனால், மருமகனோ இப்போது சொன்ன சொல்லை காப்பாற்றாமல் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார். மீண்டும் நல்ல வேலை கிடைக்குமா? இவரை நம்பி வீட்டை விற்று பணம் கொடுத்திருக்கிறோம்? என் மகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்? வழி கூறுங்கள்.  

- ஒரு வாசகர், சிங்கம்புணரி.

உங்களின் நீண்ட கடிதத்தை படித்தேன். இப்போது சந்திர தசையில் செவ்வாய்புக்தி நடந்து கொண்டிருக்கிறது. மேலும், லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் அமர்ந்து சந்திரன் தன் தசையில் செவ்வாய் புக்தியை நடத்திக் கொண்டிருக்கின்றார். அதனாலேயே மனோகாரகனாகிய சந்திரன் மெல்ல குழப்பத்தை செவ்வாய் விஷயமான வீட்டை வைத்து உருவாக்கியிருக்கின்றார். மேலும், உங்களின் லக்னாதிபதியான சனி, செவ்வாய்க்கு பகைவர். பரவாயில்லை. யாமிருக்க பயமேன் என்று செவ்வாய்க்கு அதிபதியாக முருகக் கடவுள் உங்களுக்கு துணை வருவார். கவலை கொள்ளாதீர்கள். எனவே, குன்றுகளில் குடிகொண்டிருக்கும் முருகனை தரிசித்து வரச் சொல்லுங்கள். அதுவும் பௌர்ணமியன்று சென்று வரச் சொல்லுங்கள். 2023 ஏப்ரல் மாதத்திலிருந்து புது வீடு கட்டும் வாய்ப்பும் உருவாகும். உங்கள் மருமகனும் உங்கள் மகளின் மீது பாசமாக இருப்பார். நீங்கள் பயப்படும் அளவுக்கு உங்கள் மகளின் எதிர்காலம் இல்லை.

பொதுவாகவே, கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்னைகளை ஏதேனும் ஒரு கணத்தில் அவர்களுக்குள்ளாகவே அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வீட்டினால் இருவரும் பிரிவது என்பது கூடாது. அடுத்தடுத்த வருடங்களில் இதைவிட நல்ல வீடு கட்டிக் கொண்டு அமர்வார்கள். அவர்கள் இருவரையும் ஏதேனும் வெளியூர்களுக்கு யாத்திரையாகவோ அல்லது சுற்றுலாவாகவோ சென்று வரச் சொல்லுங்கள். ஒரே இடத்தில் அமர்ந்து யோசிப்பதை விட பயணப்படும்போது மனம் மெல்ல நெகிழும். உலகத்திலுள்ள மனிதர்களை பார்க்கும்போது நாம் தனியாள் அல்ல என்கிற எண்ணம் மேலோங்கும். ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்க வேண்டும் எண்ணத்தை பயணங்கள் பலப்படுத்தும். சரி, போனது போகட்டும் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குள் ஒரு உரையாடலை ஏற்படுத்தும். ஒரே இடம். ஒரே சூழல் போன்றவை மனதை தேங்க வைக்கும். மெல்லிய வெறுப்பை ஏற்படுத்தும். எனவேதான், யாத்திரை என்று வைத்தார்கள். உங்கள் மகளை பிரதி செவ்வாய்தோறும் கந்தரலங்காரத்தை படிக்கச் சொல்லுங்கள். தயிர் சாதம் பிசைந்து தானமாக கொடுக்கச் சொல்லுங்கள். சிவப்பு நிற மலரை முருகனுக்கு சாற்ற சொல்லுங்கள். நீங்கள் தினமும் 18 முறை லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் ஓம் பயா பஹா நமஹ.. என்கிற நாமத்தை சொல்லுங்கள். மனதின் அடியிலிருக்கும் பயம் விலகும்.  

?என் மகள் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். படிப்பில் அக்கறையே இல்லாமல் விளையாட்டுத்தனமாக இருக்கிறாள். எதற்கெடுத்தாலும் கோபப்படுகின்றாள். நான் இப்போதுதான் விபத்திலிருந்து மீண்டெழுந்து வேலைக்குச் சென்று கொண்டிருக்கின்றேன். என்னைவிட மகளின் மீதுதான் எனக்கு கவலை அதிகமாக உள்ளது. வழி கூறுங்கள்.

- சம்பத்குமார், திருநெல்வேலி.

பயப்படாதீர்கள். உங்கள் மகள் மிக உயர்ந்த பதவியில் அமர்வார். இப்போதைய சூழலை வைத்து அவரை எடை போடாதீர்கள். சூரியன் - புதன் இணைவு நிபுண யோகத்தை காட்டுகின்றது. இப்போதைய கல்வியைவிட உயர்கல்வி இன்னும் சிறப்பாகவே இருக்கும். மொத்தமாக படிக்கும் படிப்பை விட தனியாக தேர்ந்தெடுத்து படிக்கும் விஷயத்தில் தனித்துவம் பெறுவார். உயர்கல்வியை குறிக்கும் இடத்தில் ராகு அமர்ந்திருப்பதால் மாற்றுக் கோணங்களில் எதை எடுத்தாலும் ஆழமாக ஆராயும் தன்மையை பெற்றிருப்பார். பத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருக்க கவலை ஏன்? இவரை நிர்வாகத்துறை சார்ந்த படிப்பில் ஈடுபடுத்துங்கள். குரு செவ்வாயை பார்ப்பதால் சொன்னதை கேட்கும் அல்லது இவர் சொன்னால் கேட்க வேண்டும் என்கிற எண்ணம் பிறருக்கு வரும். commanding personality என்கிற தனித்தன்மையோடு திகழுவார். ஆரம்ப காலங்களில் இவர் வேலைக்குச் சென்று வந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக தானே ஏதேனும் தொழில் தொடங்க வேண்டுமென்று விரும்புவார். வழக்கம்போல் தடைகள் வந்தாலும் சமாளித்து வருவார். தடைகளை ஜோதிட காரணங்களாக எப்போதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. சிறு சைக்கிள் ஓட்டும்போது இரண்டு முறை விழுந்து வார வேண்டி வரும்போது சொந்தமாக ஏதேனும் செய்து பார்க்கும்போது தொந்தரவு வரும். ஆனால், அதற்கு முன்னர் தெளிவாக திட்டங்கள் வேண்டும். அதனால், பயம் கொள்ளாதீர்கள். உங்கள் மகள் சாதிப்பாள்.

இந்த ஏப்ரல் மாத மையத்திலிருந்தே படிப்பில் கூடுதல் செலுத்துவார். படிப்பதற்கு முன்பு இசையையோ அல்லது ஏதேனும் தனக்குப் பிடித்த இன்டோர் கேம்ஸை (indoor games) விளையாடச் சொல்லுங்கள். எப்போதும் அதுதானே சார்... விளையாடறா... என்று சொல்லாதீர்கள். மனம் பிடித்ததைச் செய்த பிறகு மெல்ல படிப்பிலும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கும். நேரடியாக படி... படி... எனும்போது மனதின் கூர்மை கொள்ளும் திறன் சட்டென்று வராது. பதினொன்றில் சந்திரன் இருப்பதால் அவ்வப்போது ஆறு, அருவி அல்லது இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்று பாருங்கள். ஏனெனில், சந்திரன் விரிவும் எழுச்சியும் கொள்ளும்போது பிடித்த விஷயங்களை எளிதாகச் செய்ய முடியும். அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று சந்தன அலங்காரம் செய்யச் சொல்லி அதை உங்கள் மகளை தரிசிக்கச் சொல்லுங்கள். கொஞ்சம் கோபமும் குறையும். நந்தியாவட்டை என்கிற மலரை வாங்கி அம்பாளின் படத்தின் மீது சாற்றி, அபிராமி அந்தாதியில் வரும் பத்தாவது பாடலான நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்... என்கிற பாடலை குருவாரமான வியாழக் கிழமையன்று நீங்களோ அல்லது உங்கள் மகளையோ சொல்லச் செய்யுங்கள்.     

? முப்பத்து மூன்று வயதாகும் எனது மகனுக்கு இன்னும் திருமணம் அமையவில்லை. MBA படித்திருக்கும் அவருக்கு இன்னும் சரியான வேலையும் அமையவில்லை. குறைவான சம்பளத்தில் வேலை செய்கிறான். நல்ல வேலை, திருமணத்திற்கான வழியைக் கூறுங்கள்.

- எஸ். நிர்மலா, மதுரை.

இப்போது நிகழ்ந்து விட்டிருக்கும் குரு பெயர்ச்சியில் கோச்சார ரீதியாக குரு உங்கள் மகனின் ராசிக்குள் வருகின்றார். சரி, நம் வீட்டிலுள்ளவர்தானே என்று இவருக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென சிந்தித்து திருமணத்தை குறித்த தேடலை அதிகமாக்குவார். இந்த பதிலை எழுதும் நேரத்தில் சந்திரன் உங்களின் பிறந்த கால ஜாதக குருவை கடந்து வருகின்றார். எனவே, குரு எனும் வியாழ நோக்கம் உங்கள் மகனின் திருமணத்தை விரைவாக்கும். ராகு தோஷம் உண்டு. ஆனாலும், இவருக்கு நீங்கள் ஏற்கனவே ஏதேனும் பரிகாரங்கள் செய்திருக்கும் பட்சத்தில் அதுவும் தன் தோஷ வலிமையை இழக்கும். குருவோடு சேர்ந்த புதன் அறிவு முதிர்ச்சியை கொடுக்கும். ஆனால், கேது தசையில் சந்திர புக்தி நடப்பதால் பெரிய பெரிய பிரச்னைகள் தனக்கு ஏற்பட்டு விட்டது என்று நினைத்துக் கொண்டிருப்பார். அதேசமயம், எந்த விஷயத்தை எடுத்தாலும் முதல் சுற்றில் முடியாது மூன்றாவது சுற்றில்தான் முடியும். அதிக கஷ்டங்கள் வருவது பிறருக்கு கஷ்டங்கள் வந்தால் அதைச் சரிசெய்யத்தான் என்பதை இவர் தன் வாழ்நாளில் புரிந்து கொள்வார். அதனால், சித்தர்களின் ஜீவ சமாதிகளை தரிசித்து வரச் சொல்லுங்கள். குறிப்பாக திருவண்ணாமலையில் அருளும் சேஷாத்ரி சுவாமிகளின் ஜீவ சமாதியை தரிசித்து விட்டு கிரிவலம் வரச் சொல்லுங்கள்.

2023ம் வருடம் ஏப்ரல் தாண்டி திருமணம், வேலை என்று எல்லா எண்ணமும் ஈடேறும். நிறைய எதிர்பார்ப்புகள் இல்லாமல் திருமணம் வரை  சென்று நின்றுபோன பெண் வந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இவ்வளவுதான் கூற முடியும். கடகத்தில் உள்ள சுக்கிரன் கொஞ்சம் வலிமை குன்றியவராக இருப்பதால் தன்னை நன்கு அலங்கரித்துக் கொள்ளச் சொல்லுங்கள். சுக்கிரன் வெளிப்படட்டும். தூய வெண்மையான வேட்டியை முடிந்தபோதெல்லாம் உடுத்தச் சொல்லுங்கள். ஏனெனில், ஆசை எனும் சந்திரன் மனதில் எட்டிப் பார்க்க உடை எப்போதும் உதவும். உடைகள் மனதை மட்டுமல்ல அதோடு தொடர்புள்ள கிரகங்களையும் பலமாக்கும். உங்கள் மகனை சிவாலயங்களில் இரவு நேர அர்த்தசாம பூஜையில் கலந்து கொள்ளச் சொல்லுங்கள். பெரும் ஆலயங்களில் நடக்கும் பள்ளியறை பூஜையிலும் கலந்து கொள்ளச் சொல்லுங்கள். விரைந்து திருமணம் நடக்கும். தினமும் விநாயகர் அகவலை படிக்கச் சொல்லுங்கள்.

?என் மகனுக்கு முப்பத்தியிரண்டு வயதாகிறது. எத்தனை ஜாதகம் பார்த்தாலும் சரியாக அமையவில்லை. ராமேஸ்வரம் உட்பட பல தலங்களில் பரிகாரங்கள் செய்து விட்டோம். எங்களுக்கும் வயதாகிக் கொண்டே போகிறது. எங்களிடம் சரியாகப் பேசுவது இல்லை. அதுகூட பரவாயில்லை. அவனுக்கு நல்லபடியாக திருமணம் நடந்து அவன் நன்றாக இருந்தாலே போதும். வழி கூறுங்கள்.

 - எம். சுப்ரமணியன்,

கரூர், பசுபதிபாளையம்.

ஒன்றும் பயப்படாதீர்கள் அம்மா. குரு தசை நடந்து கொண்டிருக்கின்றது. அடுத்து இன்னும் இரண்டு வருடங்களில் வரும் சனி தசைக்குள் திருமணத்தை நடத்தி விடுவார். ஏன், இப்போதே அதற்கான நல்ல நிமித்தங்கள் தெரிகின்றன. ஆனால், திருமணமே வேண்டாம் எனும் எண்ணத்தை துரதிர்ஷ்டவசமாக கேது கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று ராகு - கேதுவிற்கான பரிகாரங்களை செய்து வையுங்கள். தந்தை வழியில் இவர் மீது யார் மிகுந்த அக்கறை உள்ளவர்களோ அவரைக் கொண்டு வரன் பார்க்கச் சொல்லுங்கள். சனி சந்திரனை கொஞ்சம் அழுத்துவதால் அவ்வப்போது தாயார் மீது கோபம் கொள்வார். அவருக்கு சமையலில் ஈடுபாடு இருந்தால் வீட்டில் விடுமுறை நாட்களில் சமைக்கச் சொல்லுங்கள். அவர் நன்கு ருசி அறிந்தவர். ஒன்றும் கவலைப்படாதீர்கள். எல்லாவற்றிற்கும் ஏதேனும் ஒரு வழியிருக்கும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். பலவீனமாக மனம் இருக்கும் நேரங்களில் பிரார்த்தனையை இன்னும் பலமாக்குங்கள். உங்கள் மகன் உங்கள் மீது உண்மையிலேயே கோபப்படவில்லை.

வெளிப்பார்வைக்கு அப்படி தெரியும். ஆனால், தன்னால் தன் பெற்றோருக்கு எந்தவிதமான மகிழ்வான தருணங்களையும் அளிக்க முடியவில்லையே என்றுதான் நினைக்கிறார். நீங்கள் மேலும் மேலும் கோபமா... கோபமா... என்று அவரை கேட்டுக் கொண்டே இருக்காதீர்கள். அப்படியே விட்டு விடுங்கள். காலம் அவரை சீராக்கும். பக்குவம் அளிக்கும். குரு பூர்வ புண்ணியத்தில் அமர்ந்திருக்கிறார். அதுவும் சுக்கிரனுடைய இடமாக அது இருப்பதால் வெள்ளிக்கிழமையன்று கரூரில் அமைந்துள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்திலுள்ள அலங்காரவல்லியை தரிசித்து வரச் சொல்லுங்கள். அபிராமி அந்தாதியிலுள்ள 16வது பாடலான கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து... எனும் பாடலை கோயிலின் ஏதேனும் ஒரு பகுதியில் உங்கள் மகன் பொருட்டு நீங்களே கூட ஒன்பது முறை பாராயணமாகச் சொல்லுங்கள். பசுபதீஸ்வரர் உங்கள் மகனுக்கு மணம் புரியும் பாக்கியத்தை அளிப்பார்.

Related Stories: