சென்னை: பிரபல மாடலாக இருந்து நடிகையான ஊர்வசி ரவுடேலா, பல்வேறு மொழிப் படங்களில் ஹீரோயினாக நடிக்கிறார். தமிழில் ‘லெஜண்ட்’ என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். சமீபத்தில் ஊர்வசி ரவுடேலா அளித்திருந்த பேட்டியில், இந்தியாவின் முக்கிய புனித தலமாக கருதப்படும் பத்ரிநாத் கோயில் அருகே ‘ஊர்வசி ரவுடேலா மந்திர்’ இருப்பதாகவும், உள்ளூர் மக்கள் அதை புனிதமாக கருதுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அந்த கோயிலுக்கு பல்வேறு பக்தர்கள் வருவதாகவும், டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் சென்று வழிபடுவதாகவும், அவர்கள் தனது போட்டோவுக்கு மாலைகள் அணிவித்து, தன்னை ‘டம்தமாமை’ என்று அழைப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஊர்வசி ரவுடேலாவின் பேச்சு தவறானது என்று மதகுருக்கள் சொல்கின்றனர். பத்ரிநாத் தாமின் முன்னாள் மத அதிகாரியான உள்ளூர் மதகுரு புவன் சந்திர உனியல் என்பவர், ஊர்வசி கோயில் சதிதேவியுடன் தொடர்புடையது என்று கூறியுள்ளார்.
இது பாம்னி மற்றும் பாண்டுகேஷ்வர் கிராமங்களில் வசிக்கும் மக்களால் பாரம்பரியமாக வழிபடப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறும்போது, ‘நடிகை இப்படி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
பிரம்மா கபால் தீர்த்த புரோஹித் கூட்டமைப்பு தலைவர் அமித் சதி, ஊர்வசியின் கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக தெரிவித்துள்ளார். ஆழமான புராண மற்றும் கலாசார முக்கியத்துவம் கொண்ட ஊர்வசி தேவியின் கோயில் மீது தனிப்பட்ட நபர்கள் இப்படிப்பட்ட உரிமை கொண்டாடும் கருத்துகளை தெரிவிக்கக்கூடாது என்று, உள்ளூர் பொதுமக்கள்
ஊடகங்களின் மூலம் கூறியுள்ளனர்.
அதே பேட்டியில் ஊர்வசி ரவுடேலா, தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருவதால், தெற்கில் அவருக்கு கோயில் கட்டப்பட வேண்டுமா என்று கேட்டபோது, ‘ஆமாம்… நான் அங்கு அதிகமான படங்களில் பணியாற்றுவதால், அங்கேயும் கோயில் இருக்க வேண்டும்’ என்று பதிலளித்தார். கடந்த 2016ல் ஊர்வசி தனது டிவிட்டர் தளத்தில், தன்னை ‘டம்தமாமை’ என்று மக்கள் வழிபடுவதாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.