ஹாலிவுட் படங்களுக்கு சீனாவில் அதிரடி தடை

பெய்ஜிங்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புக்கு எதிரொலியாக ஹாலிவுட் திரைப்படங்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 145% வரி விதித்த ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சீன அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள், சீனாவில் அதிக அளவிலான வசூலைக் குவிக்கின்றன. பிற நாடுகளை விட சீனாவில் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறும் சில ஹாலிவுட் திரைப்படங்களும் இருந்து வருகின்றன. மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாகத் திரையரங்குகளில் ஹாலிவுட் திரைப்படங்கள் வெளியாகின்றன.

ஹாலிவுட் படங்கள் உலகளவில் செய்யும் வசூலில் 10% சீனாவில் இருந்து மட்டும் கிடைக்கிறது. இதனிடையே ஹாலிவுட் திரைப்படங்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. இதற்கு முன்பு மேற்கொண்ட ஒப்பந்தங்களின் படி, சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள், ஹாலிவுட் படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விநியோகப் பணிகளைச் செய்துவந்தனர். வருவாய் பகிர்வின் அடிப்படையில் ஆண்டுக்கு புதிதாக 34 வெளிநாட்டுத் திரைப்படங்கள் சீனாவில் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் ஹாலிவுட் படங்களின் எண்ணிக்கை மட்டுமே 20 ஆக உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனையில் 25% வருவாய் சீன அரசுக்குச் செல்வதுடன் சிறிய தொகையில் எடுக்கப்படும் படங்கள், இந்த விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு உள்ளூர் விநியோகஸ்தரால் வெளியிடப்படுகிறது. இப்போது சீன அரசின் இந்த நடவடிக்கையால் ஹாலிவுட் பட நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.

Related Stories: