நீரிடை நின்ற நிமலன்

தெய்வங்கள் நீரின் நடுவிலுள்ள தீவில் தனிமாளிகையில் வீற்றிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. மகா கயிலாயத்தைச் சுற்றி பெரிய கடல்கள் இருப்பதாகச் சிவபுராணம் கூறுகிறது. விநாயகர் இட்சுசாகரம் எனும் கருப்பஞ்சாற்றுக் கடலின் மத்தியில் அமைந்துள்ள ஆனந்த பவனம் எனும் திருமாளிகையில் வீற்றிருப்பதாக விநாயக புராணம் கூறுகிறது. திருமால் பாற்கடலின் மத்தியில் பள்ளி கொண்டுள்ளார். இவ்வாறு அநேக தெய்வங்கள் நீரிடை வாழ்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதையொட்டி நீர் நிலைகளின் நடுவே ஆலயங்களை அமைக்கும் வழக்கம் வந்தது. சில தலங்களில் குளத்திற்கு நடுவே ஆலயங்களை அமைத்துள்ளனர். திருவாரூரில் கமலாயத் திருக்குளத்தின் நடுவே பெரிய சிவாலயத்தில் பெருமான் நாகநாதர் எனும் பெயரில் வீற்றிருக்கக் காண்கிறோம். திருப்பனந்தாள் காசி மடத்தில் குளத்தின் நடுவேவிநாயகர் ஆலயம் உள்ளது.

ஆற்றின் நடுவே அமைந்த திட்டுகளிலும், ஆறுகளுக்கிடையே மேட்டுப் பகுதிகளிலும் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் காங்கேயன் பாளையத்தை ஒட்டி ஓடும் காவிரி ஆற்றின் நடுவில் உள்ள பெரிய பாறையில் சிவாலயம் உள்ளது. அகத்தியர் வழிபட்டுப் பேறு பெற்ற இத்தலம் நட்டாற்றீஸ்ரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. பாலாறு கடலோடு  கலக்குமிடத்திற்குச் சற்று முன்பாக உள்ள பரமேஸ்வர மங்கலத்தில் ஆற்றுக்கு நடுவே மணல் திட்டில் கயிலாய நாதர் ஆலயம் உள்ளது. வெள்ளம் பெருகி வரும் காலங்களில் கரையில் இருந்த படியே பூசனை செய்கின்றனர். காவிரி ஆற்றின் நடுவே மணல் திட்டில் அமைந்த ஊர் திருத்துருத்தி. குத்தாலம் என்றும் அழைக்கப்படும் அத்தலத்தில் பெருமான் ‘சொன்னவாறு அறிவார்’ எனும் பெயரில் திகழ்கிறார். காவிரிக் கரையில் பூந்துருத்தி எனும் தலம் உள்ளது. தாமிரபரணி ஆற்றின் நடுவே உள்ள பாறையில் குறுக்குத்துறை சுப்ரமணியர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

பல்லவ மன்னர்கள் நீரின் நடுவில் கோயில்களை அமைத்து மகிழ்ந்துள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயிலில் கடல்நீர் சுற்றித் தேங்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. அந்த நீரில் நாகர்கள் வந்து வழிபடுவதைக் குறிக்கும் வகையில் சுற்றிலும் நாகர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சியை அடுத்துள்ள திருப்பைஞ்சீவி எனும் தலத்தில் பல்லவர்கள் சிறுகுடைவரைக் கோயிலை அமைத்துள்ளனர். முத்துமலைத் தியாகர் வீற்றிருக்கும் இந்தச் சிற்றாலயத்தில் காவிரியில் வெள்ளம் வரும்போது சுற்றிலும் நீர் நிரம்பி விடும். திருந்துதேவன்குடி (நண்டாங்கோயில்), திருப்புகலூர், ஆலங்குடி முதலிய அநேக தலங்களில் சிவாலயங்களைச் சுற்றி அகழியை அமைத்துள்ளனர். இப்போது அந்த அகழியின் சில பகுதிகளைத் தூர்த்து ஆலயத்திற்கு நிரந்தரமான வழியாக அமைத்துள்ளனர். ஜோதிர்லிங்கங்களில் ஒன்று மகாகாளேஸ்வரர் ஆகும். இவர் அன்பர்களைக் காக்க பெரிய குளத்தின் மத்தியில் இருந்து ஜோதிவடிவமாக வெளிப்பட்டார் என்று

சிவபுராணம் கூறுகிறது.

 - கார்த்திக்

Related Stories: