குடும்பம் ஒன்றிணையும் : பிரச்சனைகள் தீர்க்கும் பரிகாரங்கள்

?2019ல் என் மகனுக்கு திருமணம் நடந்தது. பெண் வீட்டில் உங்கள் பெற்றோரை விட்டு பிரிந்து வரும்படி கூறுகின்றனர். என் மகனோ! மனைவியா - பெற்றோரா என்று இருபுறமும் போராடிக்கொண்டு மன அமைதியின்றி தவிக்கிறான். என் மகனை விட்டால் எங்களை கவனிக்க யாருமில்லை. மகனும், மருமகளும் எங்களுடன் இருக்க என்ன செய்யவேண்டும்?

- ஏகாம்பரம், வேலூர்.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல அன்யோன்யம் என்பது உண்டு. பொருத்தம் என்பதும் நன்றாக இருக்கிறது. மருமகள் சிறு பெண் என்பதால் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் இன்னும் அவருக்கு புரியவில்லை. ஒரு குழந்தை பிறந்து அவர் தாயான பிறகுதான் பெற்றோரின் மனநிலை புரியவரும். அதுவரை சிறிது காலம் பொறுத்திருங்கள். உங்கள் மகனையும் பொறுமையாக இருக்கச்சொல்லுங்கள். உங்கள் மகன் கடைசி வரை பெற்றோரை நல்லபடியாக பார்த்துக்கொள்வார். மனைவியை சமாளிக்கும் திறனையும் அவர் பெற்றிருக்கிறார். உங்கள் மருமகளின் ஜாதக பலத்தின்படி 04.10.2022ற்குப் பிறகுதான் அவருக்கு மனதளவில் பொறுமையும் குடும்பப் பொறுப்பினை சுமக்கும் பாங்கும் வந்து சேரும். திங்கட்கிழமை தோறும் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வெளிப்பிராகாரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்கி பிரார்த்தனை செய்து வாருங்கள். விரைவில் குடும்பம் ஒன்றிணையும்.

?34 வயதாகும் என் மகன் நல்ல வேலையை இழந்து மூன்று வருடங்கள் ஆகிறது. அவருக்கு நல்ல வேலைவாய்ப்பும் திருமணமும் அமைய என்ன செய்ய வேண்டும்? என் கணவரின் குடும்பத்தில் ஆண் வாரிசுகளின் வாழ்க்கை அத்தனை சிறப்பாக அமையவில்லை. தோஷம் ஏதும் உள்ளதா? குலதெய்வம் எதுவென்று தெரியவில்லை.

- சாந்தா, சென்னை.

உத்திராட நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. தற்போது நடந்து வரும் நேரம் நன்றாக உள்ளதால் இந்த நேரத்தினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. வருகின்ற 26.08.2021ற்குள் இவர் நல்ல வேலையில் அமர்வதோடு திருமணத்தையும் நடத்திவிட வேண்டும். இந்த நேரத்தினை விட்டுவிட்டால் பின்னர் திருமணம் நடப்பது என்பது வெறும் கனவாகவே போய்விடும். லக்னத்தில் அமர்ந்துள்ள கேது விரக்தியான மன நிலையையும், நான்கில் இணைந்துள்ள கிரஹங்கள் இவரை சுகவாசியாகவும் இருக்க வைக்கின்றன. சம்பளத்தை பெரிதாக எண்ணாமல் முதலில் ஏதோ ஒரு வேலையைத் தேடிக்கொள்ளச் சொல்லி வலியுறுத்துங்கள். திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியையே குலதெய்வமாக எண்ணி வழிபட்டு வாருங்கள். திருமலைக்குச் சென்று பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்வதும் நன்மை தரும். பரம்பரையில் இருந்து வரும் தோஷம் நீங்க பிரதி மாதந்தோறும் வரும் அமாவாசை நாளில் உங்கள் மகன் தர்ப்பணம் செய்து முடித்த கையோடு ஏதேனும் ஒரு ஏழைப் பிராமணருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி மற்றும் மளிகை சாமான்களை வாங்கி தானமாகத் தந்து நமஸ்கரித்து வரச் சொல்லுங்கள். இவ்வாறு 11 மாதம் தொடர்ந்து செய்து வர மகனின் வாழ்வினில் நல்லதொரு முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

?பெயின்டர் வேலை செய்து வரும் என் மகனுக்கு முகத்தைத் தவிர உடம்பு முழுவதும் உருண்டை உருண்டையாக கொழுப்பு கட்டிகள் உள்ளன. இதனால் பெண் தேடுவது பெரும் பிரச்னையாக உள்ளது. அவனுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் கொழுப்புக்கட்டிகள் கரையவும் பரிகாரம் கூறுங்கள்.

- சண்முகக்குமார், திருச்சி.

மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் புதன் புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவகம் சுத்தமாக இருந்தாலும் ஏழாம் பாவக அதிபதி குரு மூன்றில் சூரியனுடன் இணைந்து அமர்ந்திருப்பது களத்ர தோஷத்தினைத் தந்திருக்கிறது. அதோடு சுக ஸ்தானம் ஆகிய நான்காம் வீடு ஜெனன ராசியாக அமைந்து அதில் களத்ர காரகன் சுக்கிரனோடு கேது இணைந்திருப்பதும், சந்திரன், சுக்கிரன், கேது ஆகிய மூன்று கிரகங்களும் கேதுவின் சாரம் பெற்றிருப்பதும் மணவாழ்வினில் தடையினைத் தந்திருக்கிறது. இருந்தாலும் தொழில் என்பது சிறப்பாக உள்ளது. தனது தொழிலில் இவரால் தொடர்ந்து அபிவிருத்தி காண இயலும். 14.09.2023ற்குப் பின் வரும் செவ்வாய் தசையின் காலத்தில் இவரை விரும்பி ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள முன்வருவார். அதுவரை பொறுத்திருக்க வேண்டியது அவசியம். திருமணத்தை தஞ்சாவூரை அடுத்து உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் வைத்து நடத்துவதாக சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து அருகில் உள்ள அம்மன் கோயிலில் நடக்கும் தனுர் மாத பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்வதோடு அம்மனை கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி மனமுருகி பிரார்த்தனை செய்து வரச் சொல்லுங்கள். உருவத்தில் நல்லதொரு மாற்றமும் மணவாழ்வு நல்லபடியாக அமையவும் காண்பீர்கள்.

“ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோதேஹி பிஷோஜஹி”

?என் தம்பி மகனுக்கு பிறவியில் இருந்தே பார்வை குறைபாடு உள்ளது. இருந்தாலும் விடாமுயற்சியினால் ரெகுலர் காலேஜில் எம்காம் சிஏ வரை தொடர்ந்து படித்து முடித்துள்ளான். படிப்பதும், எழுதுவதும் என கம்ப்யூட்டரில் வேலை செய்கிறான். ஆனால் வெளியுலக அறிவு குறைவாக உள்ளது. நண்பர்கள் யாரும் கிடையாது. மிகவும் பிடிவாதமாக உள்ளான். ஏற்கெனவே நான் என் மகனை இழந்து தவிக்கிறேன். தற்போது தம்பி மகனின் இந்த நிலையும் கவலை தருகிறது. பரம்பரையில் ஏதேனும் தோஷமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- நாகராஜன், கோவை.

கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் தம்பி மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் சனி, ராகு இணைந்து 12ல் சூரியன் சாரம் பெற்றிருப்பதும் 2ம் பாவக அதிபதி குரு ஆறாம் வீட்டில் கேதுவுடன் இணைந்திருப்பதும் இரண்டாம் வீட்டில் சுக்கிரன் சனியின் சாரம் பெற்ற நிலையில் உள்ளதும் கண்களில் பிரச்னையைத் தந்திருக்கிறது. இருந்தாலும் ஜென்ம லக்னத்தில் இடம் பெற்றிருக்கும் சூரியனும் புதனும் மன உறுதியையும் நல்ல புத்தியையும் தருகிறார்கள். பிடிவாத குணம் என்று கருதுவதை விட மனோதிடம் அதிகம் உடையவர் என்ற கோணத்தில் அவரைப் பாருங்கள். அடுத்தவர்கள் சொல் பேச்சை கேட்பதை விட அவராக சிந்தித்து எடுக்கும் முடிவே அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தரும். சுயகௌரவத்திற்கு அதிக முக்கியத்துவம் தரும் நபராக இருப்பதால் தன்னை யாரும் தாழ்த்தி பேசிவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துபவராக உள்ளார். அதனாலேயே நட்பு வட்டம் ஏதுமின்றியும் வெளியில் செல்வதில் தயக்கமும் உடையவராக இருக்கிறார். தனக்குரிய அங்கீகாரம் கிடைப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவரது எதிர்பார்ப்பு நிறைவேறும் காலம் 16.12.2021 முதல் துவங்குகிறது. அதன்பிறகு உத்யோகம், திருமணம் போன்ற விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். ஒன்பதாம் பாவக சுக்கிரன் இரண்டில் உச்சம் பெற்றிருப்பதால் இது பரம்பரையில் உண்டான தோஷம் அல்ல. உங்கள் மகன் இறந்து போனதற்கும் தம்பி மகனின் இந்த நிலைக்கும் தொடர்பு இல்லை. இது அவரவர் செய்த கர்மவினையின்படி அமைவதே ஆகும். தினமும் அதிகாலையில் எழுந்து அவரை சூரிய நமஸ்காரம் செய்து வரச் சொல்லுங்கள். சூரிய பகவானின் அருளால் அவரது வாழ்வினில்

மறுமலர்ச்சி உண்டாகக் காண்பீர்கள்.

Related Stories: