சென்னை: தனுஷ் இயக்கத்தில் அவரது சகோதரி மகன் பவிஷ் நாராயண் ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஒரு பாடல் காட்சியில் பிரியங்கா அருள் மோகன், ஜி.வி.பிரகாஷ் குமார் ஆடியுள்ளனர். வரும் 21ம் தேதி திரைக்கு வரும் இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது:
தனுஷுடன் சேர்ந்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தைப் பார்த்தேன். கதை ஜாலியாக இருக்கிறது. எமோஷனலான, தனித்துவமான படமாகவும் இருந்தது. ‘ராயன்’ படத்துக்குப் பிறகு நடிப்பில் பிசியாக இருக்கும் நிலையில், ஒரு ஜாலியான படத்தை உடனே எப்படி இயக்கி முடித்தீர்கள் என்று தனுஷிடம் கேட்டேன். சினிமாவின் அனைத்து துறைகளிலும் அவருக்கு நல்ல பரிச்சயம் இருக்கிறது. அவரது அயராத உழைப்புதான் இப்படத்தை சிறந்த முறையில் உருவாக்கியுள்ளது.
சினிமாவுக்கு நிறைய புதுமுக நடிகர், நடிகைகள் தேவைப்படுகின்றனர். அவர்களிடம் நல்ல ஆற்றலும், நடிப்புத்திறமையும் இருக்கிறது. இப்படத்தில் தனுஷ் நிறைய புதுமுகங்களை அறிமுகம் செய்துள்ளார். எதிர்காலத்தில் அவர்கள் முன்னணி இடத்துக்கு வருவார்கள். பவிஷ் நாராயண், வெங்கடேஷ் மேனன் இருவரும் தனுஷிடம் உதவி இயக்குனர்களாகப் பணியாற்றியவர்கள். இப்போது அவர்களை கதையின் நாயகர்களாக்கி தனுஷ் அழகு பார்த்திருக்கிறார். நிச்சயமாக இந்த புதுமுகங்கள் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களாக மாறுவார்கள்.