சென்னை: இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, திரையுலகிற்கு வந்து 25 வருடங்களாகியுள்ள நிலையில், தனி ஆல்பம் உருவாக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். தற்போது காதலர் தினத்துக்காக சிறப்பு வீடியோ ஆல்பம் ஒன்றை தயாரித்து இசை அமைத்துள்ளார். இந்த ஆல்பம், ஸ்ரீகாந்த் தேவா அஃபீஸியல் என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. இதுபற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறுகையில், ‘காதலர் தினத்தைக் கொண்டாடும் விதமாக, ‘பட்டாக்கத்தி கண்ணால’ என்ற ஆல்பத்தை தயாரித்து இசை அமைத்துள்ளேன்.
காதல்மதி எழுதிய இப்பாடலை ஷாம் விஷால், ஸ்ரீனிஷா ஜெயசீலன் பாடியுள்ளனர். அபிலாஷ் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.அஸ்வின் ஸ்ரீகுமார் எழுதி இயக்கியுள்ளார். இளம் காதலர்களாக சஞ்சு, ஷனம் நடித்துள்ளனர். இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை தனி ஆல்பம் வெளியிடுவேன். சினிமா பாடல்களிலும், பின்னணி இசையிலும் அதிக கவனம் செலுத்துவது போல், ஆல்பம் பாடல்களிலும் சுதந்திரமாக செயல்பட முடியும் என்ற காரணத்தால் அதிக கவனம் செலுத்துகிறேன். தொடர்ந்து இசைக்கச்சேரிகளும் நடத்தி வருகிறேன்’ என்றார்.