ஆவியின் கனி - அன்பு

உன்னிடத்தில் நீ அன்பு கூறுகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக. (யாக் 2:8)கி.பி. 1910ம் ஆண்டு 26ம் தேதி ஆக்னஸ் என்ற பெண் மாசிதோனியா நாட்டில் பிறந்தார். திருமணம் செய்யாமலே ஆண்டவரின் பணியைச் செய்ய வேண்டும் என்று தனது இளம் பிராயத்திலேயே தீர்மானம் செய்தாள். தனது வாலிப நாட்களிலே நம் நாட்டின் கொல்கத்தா பட்டணத்திற்கு வந்தார். கொல்கத்தாவில் வாழ்ந்து வந்த மக்களின் இழிவான நிலையைக் கண்டு பரிதாபம் கொண்டார். அவர் டார்ஜிலிங் என்ற ஊருக்குச் சென்று கொண்டிருந்தபோது தேவையான மக்களுக்கு உதவிசெய் ( help the needy people) என்ற தேவனுடைய சத்தத்தைக் கேட்டார். அன்றே பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேறி Slum பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு உதவி செய்யத் தொடங்கினார்.

எளிமையாக, வெள்ளை ஆடை உடுத்தி தனது சேவையை அன்போடு செய்தார். ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற விடுதியொன்றை உருவாக்கினார். தொடக்க நாட்களில் அந்த விடுதியிலிருந்தோருக்கு உணவு கொடுக்கக்கூட வழியில்லை. பலரிடத்தில் நன்கொடை பிரித்து விடுதியை நடத்தினார். ஒருமுறை செல்வந்தர் ஒருவரிடம் பணம் கேட்டபொழுது அந்த செல்வந்தர் அவரது கரங்களில் உமிழ்ந்து விட்டார். அப்பொழுது ஆக்னஸ் கொஞ்சமும் கோபம் கொள்ளாமல் இது எனக்கு! விடுதியிலுள்ள குழந்தைகளுக்கு? எனக் கேட்டார். அந்த செல்வந்தரது உள்ளம் உடைந்தது.

அந்தப் பெண்மணி யார் தெரியுமா? அவர்தான் அன்னை தெரசா. ஆம்! அன்னை தெரசாவின் இயற்பெயரே ஆக்னஸ் என்பதாகும். அனாதைகள், பசியுற்றோர், தொழுநோயாளர் ஆகிய அனைவரையும் அன்போடு அணைத்தார். ஏனெனில் அவரது உள்ளம்

அன்பினால் நிறைந்திருந்தது.அருள் நாதர் இயேசு கிறிஸ்துவின் உள்ளமும் அன்பினால் நிறைந்திருந்த காரணத்தினால் ஏழை, எளியவர்களை அன்போடு அவர் ஏற்றுக் கொண்டார். வியாதியஸ்தர்களைத் தொட்டு சுகப்படுத்தினார். தன்னைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் என்ற சீடரையும்கூட சிநேகிதனே... என்று அன்போடு அழைத்தார். மறுதலித்த பேதுரு என்ற சீடரையும் மன்னித்து ஏற்றுக் கொண்டார். இவ்வாறு குழந்தைகள், ஏழைகள், வியாதியஸ்தர்கள், உடல் ஊனமுற்றோர், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோர் ஆகிய அனைவரிடத்திலும் ஆண்டவர் இயேசு மிகுந்த அன்புள்ளவராக வாழ்ந்தார். நாமும் அவரைப்போல பிறரை நேசித்து வாழவேண்டும் என்பதற்காக நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும். (யோவான் 15:12) என்ற அன்பின் கட்டளையை நமக்குத் தந்துள்ளார்.

புனிதர் பவுலும், அன்புதான் உலகிலேயே தலைசிறந்த பண்பு என்று குறிப்பிடுகிறார். அதைவிட சிறந்தது வேறெதுவுமில்லை என்று விளக்குகிறார். ஒருவருக்கு பல மொழிகளைப் பேசும் திறமை இருக்கலாம் அல்லது இறைவனுடைய திட்டத்தை முன்னறிவிக்கின்ற வரம் இருக்கலாம். எதனையும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய அறிவு இருக்கலாம். ஆழ்ந்த விசுவாசம் இருக்கலாம். எனினும், இவையனைத்திலும் அன்பே தலைசிறந்தது என்கிறார். ஆகவே, அன்பானவர்களே ! நாமும் ஆண்டவர் இயேசுவைப்போல அன்புள்ளம் கொண்டு, நம்மால் இயன்ற நன்மைகளைப் பிறருக்குச் செய்வோம். கனிவோடும், பரிவோடும் பிறருக்கு உதவிசெய்து கிறிஸ்துவின் அன்பிற்கு செயல் வடிவம் கொடுப்போம். இறை ஆசி நம்மோடிருப்பதாக. முறிந்துப்போன உறவுகளுக்கும், உடைந்துபோன உள்ளங்களுக்கும் உயிர் கொடுப்பது, உருக்கொடுப்பது, தோள் கொடுப்பது அன்பு மட்டுமே.

Related Stories: